வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

சமூகத்தில் ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அடிப்படை கட்டமைப்புக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை ஹட்கோ வழங்குகிறது : திரு ஹர்தீப் எஸ். பூரி

Posted On: 25 APR 2022 3:31PM by PIB Chennai

சமூகத்தில் வீட்டுவசதிக்கு குறிப்பாக ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கு வீட்டுவசதி, நகர்ப்புற அடிப்படை கட்டமைப்புக்கு  தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவை வழங்குவது ஹட்கோவின்  உயர்ந்த நோக்கமாக உள்ளது என்று மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு ஹர்தீப் எஸ். பூரி தெரிவித்துள்ளார்.  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் – ஹட்கோவின் 52-வது அமைப்பு தின நிகழ்ச்சியில் இன்று அவர் உரையாற்றினார்.

இந்தியாவில்  முறைப்படியான வீட்டுவசதி, நிதிமுறைக்காக 1970-ஆம் ஆண்டு இதே நாளில் ஹட்கோ உருவாக்கப்பட்டது. 2014-ல் நகர்ப்புற வரைபடத்தில் அடிப்படையான மாற்றம் ஏற்பட்டபோது, ‘ஒவ்வொருவருக்கும் வேலை, ஒவ்வொரு ஏழைக்கும் வீடு’ என்ற பிரதமரின் அறைகூவலுக்கு ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி’ என்ற தத்துவம் வழிகாட்டுதலாக அமைந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

நிலம் என்பது மாநில அரசின் விஷயம் என்ற போதும் கூட்டமைப்பு முறையில் நாம் வாழ்வதால் மத்திய அரசால் ஊக்குவிப்பு மானியம் வழங்கும் திட்டம்  கொண்டுவரப்பட்டு மாநில அரசுகளி்ன் மூலம் செயல்படுத்துவது சாத்தியமாக உள்ளது என்றும் திரு பூரி கூறினார்.  ஒரு கோடி வீடுகள் கட்டுவது என 2015 ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட பிரதமரின் வீட்டுவசதித் திட்ட இலக்கு ஏற்கனவே எட்டப்பட்டுவிட்டது என்றும் அவர் கூறினார்.  இதனை பூர்த்தி செய்வதில் ஹட்கோவின் பங்கு மெச்சத்தக்கது என்று அவர் தெரிவித்தார். 

மத்திய அரசின் ஆட்சி மொழியை பிரபலப்படுத்தும் வகையில், ஹட்கோ வடிவமைப்பு விருதுகள் 2022, ஹட்கோ தர்பன்,  குடியிருப்பு உள்ளிட்ட ஹட்கோ வெளியீடுகளை  இந்த நிகழ்ச்சியில் திரு பூரி வெளியிட்டார்.

மத்திய வீட்டுவசதி  மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திரு கவுசல் கிஷோர் பேசுகையில், நாட்டில் நகர்மயமாதல், வேகமாக அதிகரித்து வருகிறது என்றும், 2030 வாக்கில் இது சுமார் 35 சதவீதத்தை எட்டக்கூடும் என்றும் கூறினார். அதிகரி்த்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்  மூலம் வீடுகள் வழங்குவது அரசின் பொறுப்பு என்றும் இதற்கு உதவி செய்வதில் ஹட்கோவின் பங்கு மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819828

***************



(Release ID: 1819867) Visitor Counter : 145