வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

Posted On: 22 APR 2022 3:08PM by PIB Chennai

ஏற்றுமதி மதிப்பு தொடருக்கு ஊக்கமளிக்கும் நோக்கில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபேடா) தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்துடன் (என்ஆர்டிசி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

பங்குதாரர்களுக்கு சிறந்த மதிப்பைக் கொண்டு வரும் நோக்கில் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளின் நலனுக்கான செயல்பாடுகளை ஒன்றிணைப்பதன் மூலம் இரு நிறுவனங்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. வேளாண் ஏற்றுமதி கொள்கையை நடைமுறைப்படுத்தவும், ஏற்றுமதி மதிப்பு சங்கிலியை வலுப்படுத்துவதும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மதிப்புச் சங்கிலியின் பல்வேறு நிலைகளில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் தொடர்பான தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கான கூட்டுத் திட்டங்களில் இரு நிறுவனங்களும் ஒத்துழைக்கும்.

சிறிய அளவிலான விவசாயிகளுக்கு பயனர் நட்பு மிக்க மற்றும் ஆற்றல் திறன் கொண்ட கருவிகளை உருவாக்குதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாகும் ஸ்டார்ட்அப் சூழலியலை வலுப்படுத்துதல் மற்றும் பரஸ்பர அறிவுப் பகிர்வும் இதன் நோக்கங்களாகும்.

புதுதில்லியில் உள்ள அபேடா தலைமை அலுவலகத்தில் அபேடா தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து முன்னிலையில் அபேடா செயலாளர் என்ஆர்டிசி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கமோடோர் (ஓய்வு) அமித் ரஸ்தோகி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

என்ஆர்டிசி என்பது இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சித் துறையின் நிறுவனமாகும், தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், காப்புரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் வணிகமயமாக்குதலுக்கான நோக்கத்துடன் 1953-ல் இது நிறுவப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818989

 

***************



(Release ID: 1819096) Visitor Counter : 223