வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு மாநிலங்களுக்கு திரு பியுஷ் கோயல் வலியுறுத்தல்
Posted On:
22 APR 2022 1:47PM by PIB Chennai
தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு நிறுவன (என்ஐசிடிசி) திட்டங்களை விரைவுபடுத்தவும், தொழில் வளாகப்பகுதிகளில், நிலத்தை கையகப்படுத்துவதற்கும் ஒதுக்குவதற்கும் காலக்கெடு நிர்ணயம் செய்யவும், மத்திய வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம் மற்றும் ஜவுளித் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார்.
"மிக விரைவாக முடிவெடுத்து நிலத்தை வழங்க வேண்டும், இல்லையெனில் திட்டங்களை ரத்து செய்து, பிற மாநிலங்களுக்கு வழங்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என 18 மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது," என்று திரு கோயல் கூறியுள்ளார். தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டு திட்டம் குறித்த முதலீட்டாளர் வட்ட மேசை மாநாட்டில் நேற்று இரவு பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.
நில ஆக்கிரமிப்பு இருக்கக்கூடாது என்று கூறிய அமைச்சர், நாட்டின் சொத்துகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 32 திட்டங்களை உள்ளடக்கிய 11 வழித்தடங்களை 4 கட்டங்களாக என்ஐசிடிசி செயல்படுத்தி வருகிறது.
என்ஐசிடிசி திட்டத்தின் கீழ் அமையும் முதல் நான்கு நகரியங்களில், இன்வெஸ்ட் இந்தியா அலுவலகங்களை அமைக்கும் என்றும், வளர்ந்து வரும் தொழில்துறை பகுதிகளில் சோதனை ஆய்வகங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தியா மீண்டும் உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக உருவெடுத்து, 670 பில்லியன் டாலர் ஏற்றுமதியை எட்டியுள்ளது என்று சுட்டிக்காட்டிய திரு கோயல், என்ஐசிடிசி, டிஜிட்டல் இந்தியா, பொலிவுறு நகரங்கள், 1.4 டிரில்லியன் டாலர் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் போன்ற அரசின் முயற்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழில்முனைவோர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கிரேட்டர் நொய்டா மற்றும் மும்பை தவிர தில்லியில் உள்ள பிரகதி மைதானம் மற்றும் ஐஐசிசி-துவாரகா ஆகிய இடங்களில் உலகத் தரம் வாய்ந்த கண்காட்சி மற்றும் மாநாட்டு வசதிகள் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறிய திரு கோயல், கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சி துறையின் முக்கிய இடமாக இந்தியாவை மாற்ற விரும்புகிறோம் என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818972
***************
(Release ID: 1819059)
Visitor Counter : 667