பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய ராணுவத்தின் மூத்த தலைமைத்துவம் குறித்து ராணுவ தளபதிகள் மாநாட்டில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றினார்
Posted On:
21 APR 2022 5:04PM by PIB Chennai
இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவத் தளபதிகள் மாநாடு, புதுதில்லியில், ஏப்ரல் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில், தற்போதுள்ள பாதுகாப்புச் சூழல்கள், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் மற்றும் சவால்கள், உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக, நிறுவன மறுசீரமைப்பு, தளவாடங்கள், நிர்வாகம், மனிதவள மேலாண்மை, உள்நாட்டு உற்பத்தியின் மூலம் நவீனமயமாக்கல், முக்கிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் ரஷ்யா - உக்ரைன் போரின் தாக்கத்தை மதிப்பீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் இம்மாநாடு கவனம் செலுத்துகிறது. மாநாட்டின் நான்காவது நாளில் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இந்திய ராணுவத்தின் மூத்த தலைவர்களிடையே சிறப்புரையாற்றினார். முன்னதாக, இந்திய ராணுவத்தின் "உள்நாட்டு தளவாட உற்பத்தி மூலம் நவீனமயமாக்கும்" திட்டங்களின் பணிகள் குறித்து அவர் விவரித்தார்.
இந்திய இராணுவத்தின் மீது கோடிக்கணக்கான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் நாட்டின் மிகவும் நம்பகமான மற்றும் உத்வேகம் அளிக்கும் அமைப்புகளில் ஒன்றாக திகழ்வதாகவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் உறுதிபடக் கூறினார். தேவைகளின் அடிப்படையில் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவது தவிர, நாட்டின் எல்லைப் பகுதிகளை பாதுகாப்பதிலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதிலும் ராணுவம் ஆற்றி வரும் பங்களிப்பின் முக்கியத்துவம் குறித்து அவர் எடுத்துரைத்தார். "உள்நாட்டுப் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் மீட்பு பணிகள், மருத்துவ உதவி என அனைத்து துறைகளிலும் ராணுவத்தின் பங்களிப்பின் காரணமாக நிலையான சூழலை பராமரிக்க உதவுவதாக அவர் தெரிவித்தார். நாட்டைக் கட்டமைப்பதிலும், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் இந்திய ராணுவத்தின் பங்கு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். ராணுவத் தளபதியின் மாநாட்டில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைவதாக கூறிய அவர், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் பிரதமரின் ‘பாதுகாப்பு போன்ற பாதுகாப்புப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றதற்காக ராணுவத் தலைமையைப் பாராட்டினார். முப்படைகளின் தலைமைத் தளபதி, ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவனே ஆகியோர் தங்களது பதவி காலத்தில் ராணுவத்தை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக பாராட்டுத் தெரிவித்தார்.
தற்போதைய சிக்கலான சூழல், உலகளவில் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படுத்துவதை பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார். "கலப்பினப் போர் உட்பட வழக்கத்திற்கு மாறான மற்றும் சமச்சீரற்ற போர்கள், எதிர்கால மரபுவழிப் போர்களின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும், எதிர்காலத்தில், சைபர், தகவல், தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும் நிதி ஆகிய துறைகள் மோதல் போக்குகளுடன் பிரிக்க முடியாத பகுதியாக மாறும் என்றும் அவர் தெரிவித்தார். திட்டமிடல் மற்றும் உத்திகளை வகுக்கும் போது ஆயுதப் படைகள் இந்த அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டின் வடக்கு எல்லை பகுதியில் உள்ள தற்போதைய நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், பாதுகாப்புப் படைகளின் திறன் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும், அதேவேளையில், அமைதியான தீர்வுக்கான தற்போதைய பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும், படைகளை விலக்கிக்கொள்வது மற்றும் விரிவாக்கம் தான் முன்னோக்கி செல்லும் வழி என்றும் தெரிவித்தார். ராணுவத்தினருக்கு தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அவர், “மண்டல ஒருமைப்பாட்டைக் பாதுகாக்கும் வகையில் தீவிர வானிலை மற்றும் விரோதப் படைகளை எதிர்த்துப் போராடும் நமது துருப்புக்களுக்கு நவீன ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் ஆடைகள் கிடைப்பதை உறுதிசெய்வதில் அரசு போதிய கவனம் செலுத்தும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818743
***************
(Release ID: 1818789)
Visitor Counter : 446