நித்தி ஆயோக்

மின்கலம் மாற்ற வரைவுக் கொள்கையை வெளியிட்டு கருத்துக்களை வரவேற்கிறது நிதி ஆயோக்

Posted On: 21 APR 2022 10:45AM by PIB Chennai

கிளாஸ்கோவில் நடைபெற்ற சிஓபி-26 உச்சிமாநாட்டின் போது கரியமில உமி்ழ்வு அடர்த்தியை வெகுவாகக் குறைக்க இந்தியா உறுதியளித்தது. 45 சதவீத அளவுக்கு உமிழ்வைக் குறைப்பது, 2030ஆம் ஆண்டு வாக்கில், 500 ஜிகாவாட் புதைபடிமம் இல்லாத எரிசக்தித் திறனை உருவாக்குவது, 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை 50 சதவீதம் அளவுக்கு பயன்படுத்துவது, இறுதியாக 2070-ஆம் ஆண்டில் கரியமில உமிழ்வு இல்லாத நிலையை எட்டுவது ஆகியவை இந்தியா அளித்துள்ள உறுதி மொழிகளாகும். கரியமில வாயு உமிழ்வை அதிக அளவுக்கு  அளிக்கும் துறையாக சாலைப்போக்குவரத்துத் துறை உள்ளது. மொத்த உமிழ்வில் மூன்றில் ஒரு பங்கு இந்தத் துறை மூலமே வெளியாகிறது.

போக்குவரத்துத் துறையை கரியமில உமிழ்வு இல்லாத தூய்மையானதாக்க மின்சார வாகனங்களை பயன்படுத்துவது முக்கியமாகும். இந்தியாவின் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்ற சிறப்பான வழி, மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதாகும். எனவே, மின்சார வாகன உற்பத்தியை அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மாநில அரசுகளும், மின்சார வாகன முறையை ஊக்குவிக்க உகந்த கொள்கைகளை உருவாக்கி வருகின்றன.

இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவுகளில், இந்தியாவின் மின்சார வாகன புரட்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு சக்கர வாகனங்களின் 70 முதல் 80 சதவீதம் தனியார் வாகனங்களாகும். மூன்று சக்கர வாகனங்கள் நகரங்களில் தொலைதூர பகுதிகளை அடைவதில் முக்கியத்துவம் வகிக்கின்றன.

மின்சார வாகனங்களில், மின்சாரம் குறைந்த மின்கலங்களுக்கு பதிலாக மின்னூக்கம் செய்யப்பட்ட கலங்களை மாற்றும் நடைமுறை குறித்த கொள்கை வகுக்கப்படும் என 2022-23 பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.  மின்னூக்க நிலையங்களை ஏற்படுத்த நகர்ப்புற பகுதிகளில் போதிய இடவசதி இல்லாததைக் கருத்தில் கொண்டு இந்த மின்கல மாற்ற கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. நிதி ஆயோக் இது தொடர்பாக அமைச்சகங்களுக்கு இடையிலான விவாதத்தை மேற்கொண்டு வரைவுக் கொள்கையை உருவாக்கியுள்ளது.

சம்பந்தப்பட்டவர்கள் அளிக்கும் யோசனைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில், அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி ஆயோக் அறிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் பின்வரும் வரைவுக் கொள்கை பற்றி கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.

https://www.niti.gov.in/sites/default/files/2022-04/20220420_Battery_Swapping_Policy_Draft_0.pdf 

சம்பந்தப்பட்டவர்கள் தங்களது கருத்துக்களை 2022 ஜூன் மாதம் 5-ம் தேதிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1818569

-------



(Release ID: 1818670) Visitor Counter : 212