உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

Posted On: 20 APR 2022 5:41PM by PIB Chennai

பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருது விமான போக்குவரத்து அமைச்சகத்தின் உடான் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. புதுமைகள் (பொது) மத்திய பிரிவில் இந்த விருதிற்கு உடான் திட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உடான் குழுவின் தலைவரும் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் இணை செயலாளருமான திருமதி உஷா பதிக்கு விமான போக்குவரத்து அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா இந்த விருதை விமான போக்குவரத்து அமைச்சக செயலாளர் திரு ராஜீவ் பன்சால் மற்றும் இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் திரு சஞ்சீவ் குமார் ஆகியோரின் முன்னிலையில் வழங்கினார்.

அரசின் மாவட்டங்கள் மற்றும் அமைப்புகளால் செய்யப்படும் அசாதாரணமான மற்றும் புதுமையான பணிகளை அங்கீகரித்து, வெகுமதி அளிக்க இந்திய அரசு இந்த விருதைத் தொடங்கியுள்ளது. நல்ல நிர்வாகம், சிறப்பான சாதனைகள் மற்றும் கடைசி மைல் இணைப்பு ஆகியவற்றை இந்தத் திட்டம் வலியுறுத்துகிறது. கோப்பை, பாராட்டு பத்திரம் மற்றும் ஊக்கத்தொகையாக ரூ.10 லட்சம் ஆகியவற்றை தாங்கி இந்த விருது வருகிறது.

2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உடான் திட்டம், சாமானியர்களின் ஆசைகளை தொலைநோக்குப் பார்வையுடன் நிறைவேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, மேம்படுத்தப்பட்ட விமான உள்கட்டமைப்பு மற்றும் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் விமான இணைப்பு ஆகியவை இதன் இலக்குகளாகும். வெறும் 5 ஆண்டுகளில் 419 உடான் வழித்தடங்கள், ஹெலிபோர்ட்கள் மற்றும் நீர் விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றை இத்திட்டம் வைத்துள்ளது. 92 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளனர்.

இத்திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் பறந்துள்ளன. மலைப்பாங்கான மாநிலங்கள், வடகிழக்கு பகுதி மற்றும் தீவுகள் உட்பட இந்தியா முழுவதும் பல துறைகளுக்கு இது பெரிதும் பயனளித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தில் சாதகமான தாக்கத்தை இத்திட்டம் ஏற்படுத்துவதோடு தொழில்துறை பங்குதாரர்களிடமிருந்து குறிப்பாக விமான சேவை வழங்குநர்கள் மற்றும் மாநில அரசுகளிடமிருந்து சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. 350-க்கும் மேற்பட்ட புதிய நகரங்களில் இதில் இணைக்கப்பட உள்ளன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1818418

***************



(Release ID: 1818463) Visitor Counter : 114