குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நமது அனுதாபம் தேவையில்லை, அவர்களது ஆற்றலை மேம்படுத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பெற அவர்களுக்கு உரிமை உள்ளது; குடியரசு துணைத்தலைவர்
Posted On:
17 APR 2022 6:13PM by PIB Chennai
மாற்றுத்திறனாளி சமூகத்தின் மீதான மக்களின் மனப்போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும் என்றும், அவர்களுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பது அரசு மற்றும் சமுதாயத்தின் பொறுப்பு என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அவர்கள் செயல்திறனுடன் செழித்தோங்குவதற்கு உகந்த சூழலை உருவாக்குவது அவசியம் என அவர் வலியுறுத்தினார். ‘’ மாற்றுத்திறனாளிகளுக்கு நமது அனுதாபம் தேவையில்லை, அவர்கள் முழு ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் பெற அவர்களுக்கு உரிமை உள்ளது’’ என்று அவர் கூறினார்.
ஹைதராபாத்தில் உள்ள அறிவுசார் திறன்குறைபாடு கொண்டவர்களை அதிகாரப்படுத்துவதற்கான தேசிய நிறுவனத்தில் உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், இந்த விஷயத்தில் அந்நிறுவனம் சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.
சுற்றுச்சூழல், போக்குவரத்து, தகவல் மற்றும் தொடர்பு முறைகளில் அவர்களுக்கு அணுகும் வகையில் சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். பொது இடங்கள், போக்குவரத்து, தனியார் கட்டிடங்கள் ஆகியவற்றை எளிதில் அணுகும் வகையில் அமைப்பது அவசியம் என திரு நாயுடு வலியுறுத்தினார். பள்ளிகளில், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் தேவைகளை அறிந்து, உணர்வு பூர்வமாக செயல்படும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைப் பணியமர்த்துவது முக்கியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில்நுட்பத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இந்தியாவில் உள்ள தேசிய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறன் தொழில்நுட்பத்தை எளிதில் அணுகும்வகையில் பணியாற்ற வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கி வருவது குறித்து திரு நாயுடு பாராட்டு தெரிவித்தார். ‘’ இந்த சிறப்பு குழந்தைகள் தங்கள் ஆற்றலை அதிக அளவில் மேம்படுத்தும் வகையில் ஊக்குவிக்கும் உங்களை நான் வணங்குகிறேன். நீங்கள் அனைவரும் நம்பிக்கை மற்றும் நிபந்தனையற்ற அன்பின் உண்மையான உருவகங்கள்’’ என்று அவர் புகழ்ந்தார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1817586
****
(Release ID: 1817604)
Visitor Counter : 176