பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் பிரதமர்களின் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்

Posted On: 14 APR 2022 5:21PM by PIB Chennai

எனது அமைச்சரவை சகாக்களே, மூத்த நாடாளுமன்ற சகாக்களே, பல்வேறு கட்சிகளை சேர்ந்த மரியாதைக்குரிய நண்பர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே! 

நாட்டின் பல்வேறு இடங்களில் தற்போது பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இன்று பைசாகி மற்றும் போஹக் பிஹு ஆகும். ஒடிய புத்தாண்டும் இன்று பிறக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த நமது சகோதர, சகோதரிகளும் புத்தாண்டை இன்று வரவேற்றுள்ளனர், புத்தாண்டன்று நான் அவர்களை வாழ்த்துகிறேன். 

மேலும் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில் இதர பல பண்டிகைகளும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்த பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள், உங்கள் அனைவருக்கும் மகாவீரர் ஜெயந்தி வாழ்த்துகள். 

நண்பர்களே,

இன்றைய நிகழ்வு மற்ற காரணங்களால் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது. பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று முழு தேசமும் அவரை மிகவும் மரியாதையுடன் நினைவுகூருகிறது. பாபாசாகேப் தலைமையில் கட்டமைக்கப்பட்ட அரசியலமைப்பு, நாடாளுமன்ற முறைக்கான அடித்தளத்தை நமக்கு அளித்துள்ளது. இந்த நாடாளுமன்ற முறைமையின் முக்கிய பொறுப்பு நாட்டின் பிரதமர் பதவிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

இன்று பிரதமர்கள் அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 'விடுதலையின் அமிர்தப் பெருவிழா' என்ற பெயரில் நாம் அதைக் கொண்டாடும் நிலையில், இந்த அருங்காட்சியகம் ஒரு சிறந்த உத்வேகமாக உருவெடுத்துள்ளது. 

இந்த 75 ஆண்டுகளில் நாடு பல்வேறு பெருமைக்குரிய தருணங்களை கண்டுள்ளது. வரலாற்றில் இந்த தருணங்களின் முக்கியத்துவம் இணையற்றது. இதுபோன்ற பல தருணங்கள் பிரதமர்களின் அருங்காட்சியகத்திலும் பிரதிபலிக்கும். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறிது நேரத்திற்கு முன்பு, இந்த திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து சக ஊழியர்களையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அனைவரும் பாராட்டத்தக்க பணியை செய்துள்ளனர். அதற்காக ஒட்டுமொத்த குழுவையும் வாழ்த்துகிறேன். 

முன்னாள் பிரதமர்களின் குடும்பத்தினரையும் இன்று இங்கு பார்க்க முடிகிறது. உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பிரதம மந்திரிகள் அருங்காட்சியகத்தின் திறப்பு விழா உங்கள் அனைவரின் வருகையால் மிகவும் பிரமாண்டமாக மாறியுள்ளது. உங்கள் பங்கேற்பு பிரதம மந்திரிகள் அருங்காட்சியகத்தின் முக்கியத்துவத்தையும் மேலும் அதிகப்படுத்தியுள்ளது.  

நண்பர்களே, 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரசும் நாட்டை அதன் தற்போதைய புகழ்பெற்ற இடத்திற்கு கொண்டு செல்வதில் பங்களித்தது. செங்கோட்டையின் அரண்களில் இருந்தும் இதை நான் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லி இருக்கிறேன். 

இன்று இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு அரசின் பகிரப்பட்ட பாரம்பரியத்தின் வாழும் அடையாளமாகவும் மாறியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிரதமரும் தமது காலத்தில் பல்வேறு சவால்களை சமாளித்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முயன்றுள்ளனர். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான ஆளுமை, சாதனை மற்றும் தலைமைத்துவம் இருந்தது. இவை அனைத்தும் பொது நினைவகத்தில் உள்ளன. நாட்டு மக்கள் குறிப்பாக இளைஞர்கள் - வருங்கால சந்ததியினர் - அனைத்து பிரதமர்களையும் அறிந்து, புரிந்து கொண்டால், அவர்கள் உத்வேகம் பெறுவார்கள்.  

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816811

 


(Release ID: 1817066) Visitor Counter : 216