பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தியோகர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்

Posted On: 13 APR 2022 9:43PM by PIB Chennai

தியோகர் கம்பிவட கார் விபத்தை அடுத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்ட இந்திய விமானப்படை, இந்திய ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படை, இந்தியா - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை, உள்ளூர் நிர்வாகம், சிவில் சமூகம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். மத்திய அமைச்சர் திரு அமித்ஷா, நாடாளுமன்ற உறுப்பினர் திரு நிஷிகாந்த் துபே, உள்துறை அமைச்சக செயலாளர், ராணுவத் தளபதி, விமானப்படை தளபதி, தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமை இயக்குநர், இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படையின் தலைமை இயக்குநர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரையும் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித்ஷா பாராட்டினார். மிகவும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு இது ஓர் உதாரணமாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர், மீட்புக் குழுக்களைப் பாராட்டியதுடன் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார். நெருக்கடியான காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் திறனை நமது ராணுவத்தினரும் விமானப் படையினரும் இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையினரும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், காவல்துறையினரும் பெற்றிருக்கிறார்கள் என்பது குறித்து நாடு பெருமிதம் கொள்கிறது என்று அவர் கூறினார். "மூன்று நாட்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு சிக்கலான மீட்பு நடவடிக்கையை நீங்கள் பூர்த்தி செய்து இருக்கிறீர்கள். மக்கள் பலரை காப்பாற்றியிருக்கிறீர்கள்.
இது பாபா வைத்தியநாத்ஜியின் கருணை என்றும் நான் கருதுகிறேன்" என அவர் மேலும் கூறினார்.

பல பயணிகளைக் காப்பாற்றிய
தியோகர் கம்பிவட போக்குவரத்து அமைப்பைச் சேர்ந்த திரு பன்னாலால் ஜோஷி, மீட்புப் பணிகளில் பொது மக்களின் பங்களிப்பை விவரித்தார்.
அப்போது பேசிய பிரதமர், மற்றவர்களுக்கு உதவுவது நமது கலாச்சாரத்தின் பகுதி என்றார். இவர்களின் தைரியத்தையும் அவர் பாராட்டினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் அதிகாரி ஓம் பிரகாஷ் கோஸ்வாமி, இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் ஒய் கே பந்தேல்கால், இந்திய- திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் திரு ஆனந்த் பாண்டே, மாவட்ட மாஜிஸ்ட்ரேட் திரு மஞ்சுநாத் பஜன்தாரி, பிரிகேடியர் அஸ்வினி நய்யார் ஆகியோர் சம்பவ இடத்தில் நடந்தவற்றை பிரதமரிடம் விவரித்தனர்.

மீட்பு நடவடிக்கைகளின் போது குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களை எப்போதும் நினைவு கொள்வதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். இத்தகைய அனுபவத்தில் நிலையான மேம்பாட்டை நமது படைப்பிரிவுகள் பெற்று வருவதற்கு அவர் பாராட்டு தெரிவித்தார். படைப் பிரிவுகளின் உறுதியையும் பொறுமையையும் அவர் பாராட்டினார். உபகரணங்கள் மற்றும் நிதி விஷயத்தில் மீட்புப் படைகளுக்குப் போதிய அளவு உதவ தமது அரசின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார். இறந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தித்தார். இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவரும் அதுபற்றி விரிவாக ஆவணப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இது எதிர்காலத்திற்கு நிச்சயம் பயன்படும் என்று கூறி பேச்சை நிறைவு செய்தார்.

**********


(Release ID: 1816815) Visitor Counter : 179