குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி, செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் ஆகியவற்றை பரவலாக்க குடியரசுத் துணைத்தலைவர் வலியுறுத்தல்

Posted On: 11 APR 2022 1:40PM by PIB Chennai

கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் முழுமையான வளர்ச்சிக்காகவும், தேசிய வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடையவும், நிதிகள், செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டாளர்களை பரவலாக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு இன்று அழைப்பு விடுத்தார்.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நிலையான வளர்ச்சி இலக்குகளின் உள்ளூர்மயமாக்கல்' குறித்த தேசிய மாநாட்டைத் தொடங்கிவைத்த அவர், மாவட்ட நிர்வாகங்களில் இருந்து பஞ்சாயத்துகளுக்கு மேற்கண்ட மூன்று அம்சங்களை வழங்குவதை எளிதாக்குமாறு மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்களை வலியுறுத்தினார். ஊரக உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தி, அதிகாரமளிப்பதன் மூலம் அவற்றுக்கு புத்துயிரையும் புத்தாக்கத்தையும் அளிக்க வேண்டும், என்றார் அவர்.

10-வது நிதிக் குழுவில் தனிநபருக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ 100 ஆக இருந்த ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு 15-வது நிதிக்குழுவில் ஆண்டுக்கு ரூ 674 ஆக உயர்த்தப்பட்டதைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், எந்தவித திசைதிருப்பல், நீர்த்தல் மற்றும் விலகல் இல்லாமல் அவர்களின் கணக்குகளுக்கு நிதி நேரடியாகச் செல்ல வேண்டும் என்றார். அதேபோல், மக்களுக்கு வழங்கப்படும் ஒவ்வொரு மானியமும் பயனாளிகளுக்கு நேரடியாகச் சென்று சேர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியாவின் கிட்டத்தட்ட 70% கிராமப்புறமாக இருப்பதால் (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 68.84%), தேசிய அளவில் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு கிராமங்களின் அடிமட்டத்தில்-அதாவது பஞ்சாயத்து மட்டத்தில் நடவடிக்கைகள் தேவைப்படும் என்று திரு நாயுடு கூறினார்.

 

வறுமையில்லா நாட்டை உருவாக்குவதே மிகப்பெரிய குறிக்கோள் என்று குறிப்பிட்ட அவர், அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிப்பது, பாதுகாப்பான குடிநீர் போன்ற முக்கியமான சேவைகளை வழங்குவதை உறுதி செய்தல் மற்றும் போதுமான வேலை வாய்ப்புகளை உருவாக்குவது ஆகியவை சமமான முக்கியமான பணிகளாகும் என்றார்.

நாட்டில் உள்ள 31.65 லட்சம் கிராமப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளில் 46 சதவீதம் பெண்களே உள்ளனர் என்று மகிழ்ச்சி தெரிவித்த அவர், சட்டமன்றங்களிலும் சட்டங்களை இயற்றும் மற்ற அமைப்புகளிலும் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார். "பெண்களுக்கு அதிகாரமளிப்பது சமூகத்தை மேம்படுத்துவதாகும்" என்று அவர் மேலும் கூறினார்.

அடிமட்ட அளவில் அனைத்து திட்டங்களிலும் மக்கள் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்த குடியரசுத் துணைத் தலைவர், பஞ்சாயத்துகளின் விரிவான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் பல்வேறு இலக்குகளை அடைவதற்கும் அனைத்து பங்குதாரர்களிடமிருந்தும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.

வறுமை இல்லாத, சுத்தமான, ஆரோக்கியமான, குழந்தைகளுக்கு நட்பான மற்றும் சமூகப் பாதுகாப்பு மிகுந்த நல்லாட்சி கிராமங்களை உறுதிசெய்யும் ஒன்பது கருப்பொருள்களின் கீழ் பஞ்சாயத்துகள் கவனம் செலுத்துவதன் மூலம் ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று திரு நாயுடு கூறினார்.

உள்ளூர் நிர்வாகத்தில் மக்கள் நேரடியாகப் பங்கேற்பதில் கிராம சபைகளின் முக்கியப் பங்கைக் குறிப்பிட்ட திரு நாயுடு, ஒரு வருடத்தில் எத்தனை கிராம சபைகள் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான சட்டக் கட்டமைப்பு அவசியமானது என்றார்.

வெளிப்படையான, பொறுப்புணர்வு மிக்க மற்றும் திறமையான நிர்வாகத்தின் அவசியத்தை அனைத்து மட்டங்களிலும் வலியுறுத்திய திரு நாயுடு, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் நல்ல நிர்வாகத்திற்காக -கிராம் ஸ்வராஜ் போன்ற டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகப்படுத்தியதற்காக பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தைப் பாராட்டினார். 2.38 லட்சம் கிராம பஞ்சாயத்துகள் -கிராம் சுயராஜ்ஜியத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிப்பிட்ட அவர், டிஜிட்டல் நிர்வாகத்தின் இலக்கை அடைய அனைத்து பஞ்சாயத்துகளையும் இந்த தளத்தில் கொண்டு வர அழைப்பு விடுத்தார்.

அடிமட்ட அளவில் தலைவர்களாகவும், திட்டமிடுபவர்களாகவும், கொள்கை வகுப்பாளர்களாகவும் பஞ்சாயத்துகள் உருவெடுத்துள்ளதை குறிப்பிட்ட அவர், அவர்களின் சாதனைகளின் மூலம் உள்ளூரில் இருந்து மாற்றத்தின் உண்மையான உணர்வில் தேசிய மற்றும் உலகளாவிய இலக்குகளை இந்தியா அடைய உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கிரிராஜ் சிங், ஜல் சக்தி அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு ஃபக்கன் சிங் குலஸ்தே, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு கபில் மொரேஷ்வர் பாட்டீல், பஞ்சாயத்து ராஜ் அமைச்சக செயலாளர் திரு சுனில் குமார் மற்றும் உயரதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815609

***************



(Release ID: 1815647) Visitor Counter : 532