அணுசக்தி அமைச்சகம்

இந்தியாவின் அணுசக்தி திட்டம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கே தவிர மனித வாழ்க்கைக்கு தீங்கு விளைவிப்பதற்கல்ல என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 09 APR 2022 5:53PM by PIB Chennai

இந்தியாவின் அணுசக்தி திட்டம் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கே  தவிர மனித வாழ்க்கைக்கு தீங்கு விளைவிப்பதற்கல்ல என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பம் ( தனிப்பொறுப்பு) , புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர் , பொதுமக்கள் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளி துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார்.

புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெற்ற அணுசக்தி மற்றும் விண்வெளி துறையில் மாற்றியமைக்கப்பட்ட கூட்டு இந்தி சலாக்கர் சமிதி கூட்டத்திற்கு டாக்டர் ஜித்தேந்திர சிங் தலைமை தாங்கினார்.

அணுசக்தியை அமைதி பயன்பாட்டுக்கு மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், டாக்டர் ஹோமி பாபாவின் அணுசக்தி திட்டம் தொடங்கியதிலிருந்து இந்தியா மிக நீண்டபயணத்தை மேற்கொண்டுள்ளதாக டாக்டர் ஜித்தேந்திர சிங் கூறினார். டாக்டர் பாபாவின் உன்னதமான உறுதிமொழியை புதுப்பிக்க வேண்டிய தருணம் இது என்று அவர் கூறினார்.

மின்சார உற்பத்தி, வேளாண்மை, மருத்துவம், சுகாதாரம், உணவு பதனிடல், வீரிய விதை வகைகள், தண்ணீர் தூய்மையாக்கல் தொழில்நுட்பம், நகர்ப்புற கழிவு மேலாண்மை தொழில்நுட்பம், பெட்ரோலியத் துறையில் கதிர்வீச்சு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் அணுசக்தி மற்றும் கதிர்வீச்சு முக்கிய பங்காற்றுகிறது என்று அமைச்சர் கூறினார். அணுசக்தியின் சமுதாய பயன்பாடு மக்களுக்கு அதிகமாக தெரியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

விண்வெளி மற்றும் அணுசக்தியின் சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்ல குழுவின் உறுப்பினர்களும், தேசிய மொழி துறையும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ஜித்தேந்திர சிங் வலியுறுத்தினார். மொழிபெயர்ப்பில் நிபுணத்துவம் கொண்டவர்களை வைத்து, இந்தியிலும், இதர மொழிகளிலும் மொழிபெயர்த்து மக்களிடம் இந்த சாதனைகளை பரப்ப வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், அமித் ஷாவின் தலைமையின் கீழ் இயங்கும் உள்துறையின் பகுதியாக செயல்படும் தேசிய மொழி துறை, பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது என்று கூறிய அமைச்சர், மத்திய அமைச்சகங்கள், துறைகளின் அலுவல் பணிகள் இந்தியிலேயே மேற்கொள்ளப்படுகின்றன என்றார். வட்டார மொழிகளில் அறிவியல் தகவல்களை பெருமளவில் பரப்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறிவருவதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். மொழி என்பது வசதிக்காக இருக்கவேண்டுமே தவிர தடையாக இருக்ககூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815240

******



(Release ID: 1815256) Visitor Counter : 205