விவசாயத்துறை அமைச்சகம்
விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குதல்
Posted On:
05 APR 2022 4:08PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
“விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது” தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்வதற்கும், இலக்கை அடைவதற்கான யுக்திகளைப் பரிந்துரைப்பதற்கும் அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவுடன் ஏப்ரல் 2016-ல் அரசு கலந்தாலோசித்தது.
2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான யுக்திகளைக் கொண்ட தனது அறிக்கையை 2018 செப்டம்பரில் அரசிடம் குழு சமர்ப்பித்தது. விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான குழு வேளாண்மையை மதிப்புமிக்க தொழிலாக அங்கீகரித்துள்ளதோடு வளர்ச்சிக்கான ஏழு முக்கிய ஆதாரங்களைக் கண்டறிந்துள்ளது. அவை வருமாறு:
(i) பயிர் உற்பத்தி அதிகரிப்பு; (II) கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு; (III) வளங்களைப் பயன்படுத்துதல் அல்லது உற்பத்திச் செலவில் சேமிப்பு; (IV) பயிர் தீவிரம் அதிகரிப்பு; (V) அதிக மதிப்புள்ள பயிர்களை நோக்கி பல்வகைப்படுத்துதல்; (VI) விவசாயிகள் பெறும் உண்மையான விலையில் முன்னேற்றம்; மற்றும் (VII) பண்ணையில் இருந்து பண்ணை அல்லாத தொழில்களுக்கு மாறுதல்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும் கண்காணிக்கவும் ‘அதிகாரமளிக்கப்பட்ட அமைப்பு’ ஒன்றுடன் அரசு கலந்தாலோசித்துள்ளது.
மண் பரிசோதனை அடிப்படையிலான சமச்சீர் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையை இயற்கை அல்லது செயற்கை ஆதாரங்களின் (உரம், உயிர் உரங்கள், பசுமை உரம், பயிர் எச்சங்களை மறுசுழற்சி செய்தல் போன்றவை) மூலம் மேற்கொள்ள இந்திய அரசு பரிந்துரைக்கிறது.
பரிந்துரைகளின் அடிப்படையில் உரங்களை சமச்சீராகப் பயன்படுத்துவது பற்றிய செயல்விளக்கம் மற்றும் உரங்களின் முறையான மற்றும் ஒருங்கிணைந்த பயன்பாடு குறித்த விவசாயிகளுக்கு பயிற்சி ஆகியவை திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும், விவசாய நிலங்கள் குறித்த செயல்விளக்கம் மற்றும் உழவர் திருவிழாக்களை நடத்தவும் மாநில அரசுகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. மண் ஆரோக்கியம் மற்றும் வளத்தை நிர்வகிப்பதற்கான தேசிய திட்டத்தின் கீழ் மண்ணின் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813688
*******
(Release ID: 1813826)