உள்துறை அமைச்சகம்
இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த இடங்களின் வளர்ச்சி
Posted On:
05 APR 2022 3:07PM by PIB Chennai
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் திரு நித்யானந்த் ராய் கீழ்காணும் தகவல்களை வழங்கினார்.
இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி, 'காவல் மற்றும் பொது ஒழுங்கு' மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இருப்பினும், இடதுசாரி பயங்கரவாத அச்சுறுத்தலை முழுமையாக எதிர்கொள்ள, தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் 2015-ல் தொடங்கப்பட்டது.
பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள், மேம்பாட்டுத் தலையீடுகள், உள்ளூர் சமூகங்களின் உரிமைகளை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய பல்முனை உத்தியை இது வழங்குகிறது.
வளர்ச்சியை பொறுத்தவரை, சாலைக் கட்டமைப்பை விரிவாக்குவதல், தொலைத்தொடர்பு இணைப்புகளை மேம்படுத்துதல், உள்ளூர் மக்களின் நிதி உள்ளடக்கம், இடதுசாரி பயங்கரவாதம் பாதித்த பகுதிகளில் திறன் மேம்பாடு மற்றும் கல்வி வசதிகள் உள்ளிட்டவற்றில் சிறப்பு முனைப்புடன் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளது.
இத்தகைய பகுதிகளில் 16,200 கி.மீ.க்கும் அதிகமான சாலைகளுக்கு குறிப்பிட்ட திட்டங்களின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 10,600 கி.மீ. சாலைகள் சுமார் ரூ 13,000 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி பயங்கரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான கைபேசி இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 2,343 மொபைல் கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் 2,542 டவர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக 4,312 அலைபேசி கோபுரங்களுக்கு முன்னேற விழையும் மாவட்டங்களுக்கான திட்டத்தின் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் உள்ள இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்காக, 47 மாவட்டங்களில் தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் (ஐடிஐ) மற்றும் 34 மாவட்டங்களில் திறன் மேம்பாட்டு மையங்கள் ரூ 407 கோடி மதிப்பீட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இடதுசாரி பயங்கரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இது வரை அங்கீகரிக்கப்பட்டுள்ள 234 ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 99 பள்ளிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், இத்தகைய அனைத்து மாவட்டங்களிலும் கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813626
********
(Release ID: 1813810)
Visitor Counter : 353