உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

தெரிவு செய்யப்பட்ட சர்வதேச நாடுகளிலிருந்து வடகிழக்கு மாநிலங்களை இணைக்க சர்வதேச விமானப் போக்குவரத்து இணைப்புத் திட்டம்

Posted On: 04 APR 2022 2:17PM by PIB Chennai

சமூக, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த தெரிவு செய்யப்பட்ட சர்வதேச நாடுகளுடன் நாட்டின் சில மாநிலங்களிலிருந்து தொடர்பை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் சர்வதேச விமானப் போக்குவரத்து இணைப்புத் திட்டத்தை சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டம் மாநில அரசுகளால் வரவேற்பைப் பெற்றுள்ளது. அசாம், மணிப்பூர், திரிபுரா ஆகிய மாநில அரசுகள் குவகாத்தி, இம்பால், அகர்தலா ஆகிய நகரங்களை இணைப்பதற்கான வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளன. பாங்காக், டாக்கா, யாங்கூன், ஹனோய், மண்டலே, குன்மிங், சிட்டகாங்க் ஆகிய இடங்களிலிருந்து விமானப் போக்குவரத்தை நடத்த இந்த மாநிலங்கள் திட்டமிட்டுள்ளன.

தற்போதுள்ள நிலவரப்படி குவகாத்தி, இம்பால் ஆகிய வடகிழக்குப் பிராந்தியத்தில் இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இவற்றை குவகாத்தி சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுவனம், இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் ஆகியவை முறையே செயல்படுத்தி வருகின்றன.

அகர்தலா விமான நிலையத்தின் புதிய முனையம் சர்வதேச விமான நிலையத்திற்கு தேவைப்படும் அம்சங்களைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இம்பால் விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடம் ரூ.500 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் திரு.வி.கே.சிங் மாநிலங்களவையில்  இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

*****



(Release ID: 1813163) Visitor Counter : 234