ஆயுஷ்
உலக பாரம்பரிய மருத்துவ மையம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு கையெழுத்து
Posted On:
26 MAR 2022 12:16PM by PIB Chennai
குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகப் பாரம்பரிய மருத்துவ மையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் உலக சுகாதார அமைப்புடன் மையத்தின் தாயகமான இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. இதன் இடைக்கால அலுவலகம் குஜராத்தின் ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் இயங்கும். மத்திய அரசின் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் இந்த மையம் செயல்படும். உலக மக்களின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை முன்னேற்றுவதற்கான, உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய மருத்துவ வளத்தை நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஜெனிவாவில் மார்ச் 25-ம்தேதி மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த மையத்தை நிறுவுவதற்கு கடந்த மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வு குறித்து செய்தி வெளியிட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, ‘’ உலகப் பாரம்பரிய மருத்துவ மையத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதை அறிந்து உள்ளம் பெருமகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. பல்வேறு முன்முயற்சிகள் மூலம் நமது அரசு மேற்கொண்ட இடையறாத முயற்சிக்கு பலன் கிட்டியுள்ளது. ஜாம் நகரில் அமையவுள்ள இந்த உலக மையம், உலகின் சிறந்த சுகாதாரத் தீர்வுகளை வழங்கும்’’ எனக் கூறியுள்ளார்.
நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சிகளின் காரணமாக தமது அமைச்சகத்திற்கு இந்தப் பெருமை கிட்டியுள்ளதாக ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இந்த நிகழ்ச்சியில் பேசிய போது குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ், இந்திய அரசின் முன்முயற்சியைப் பாராட்டினார். பாரம்பரிய மருத்துவ வளத்தை நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக இந்த மையம் மேம்படுத்தும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த மையத்திற்கான பூமிபூஜை அடுத்த மாதம் 21-ந்தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809948
***************
(Release ID: 1809988)
Visitor Counter : 514