ரெயில்வே அமைச்சகம்
ரயில் நிலையங்களை அழகுபடுத்துதல் மற்றும் நவீனப்படுத்துதல்
Posted On:
25 MAR 2022 1:50PM by PIB Chennai
ரயில் நிலையங்களை மேம்படுத்தி, அழகுபடுத்தி நவீனப்படுத்த, மாதிரி, நவீன மற்றும் முன்மாதிரி ரயில் நிலைய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ரயில்வே அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
‘மாதிரி’ ரயில் நிலையத்திட்டம் 1999 முதல் 2008 வரை செயல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் ஒரு கோட்டத்திற்கு ஒரு ரயில் நிலையம் இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டு விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு அனைத்து ‘ஏ’ மற்றும் ‘பி’ வகை ரயில் நிலையங்கள் வருடாந்திர பயணியர் கட்டண வருவாய் அடிப்படையில் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டன.
இதன்படி 594 ரயில் நிலையங்கள் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டன. இவற்றில், அரக்கோணம், செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, கோவை மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, ஓசூர் உட்பட தமிழ்நாட்டின் 27 ரயில் நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 590 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. எஞ்சிய நான்கு ரயில் நிலையங்களில், இரண்டு ரயில் நிலையங்களுக்கான மேம்பாட்டுத்திட்டம் கைவிடப்பட்டன, இரண்டு ரயில் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன.
இதே போன்று ‘நவீன’ ரயில் நிலையங்கள் திட்டத்தின் கீழ், 637 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து இடங்களிலும் பணிகள் முடிக்கப்பட்டுவிட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆம்பூர், தர்மபுரி, திண்டுக்கல், பழனி, மயிலாடுதுறை, காரைக்குடி, சேலம், திருவாரூர், திருத்தணி, ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்தின் 32 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
‘முன் மாதிரி’ ரயில் நிலையத் திட்டத்தின் கீழ், அரியலூர், ஆவடி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராஜபாளையம், தென்காசி, திருப்பூர், திருவள்ளூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம், காட்பாடி உள்ளிட்ட தமிழகத்தின் 50 ரயில்நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 1,253 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இதுவரை 1,213 ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1809566
***************
(Release ID: 1809825)
Visitor Counter : 241