ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரயில் பாதைகள் அருகே விலங்குகள் பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 25 MAR 2022 1:35PM by PIB Chennai

வன விலங்குகள் ரயில் தண்டவாளங்களில் அடிபட்டு உயிரிழப்பதைக் குறைக்க அந்தந்த மண்டல ரயில்வேக்கள் ஏராளமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த அவர், தண்டவாளங்களுக்கு அருகே கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்தவும், காட்டுத் தாவரங்களை அகற்றவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், கால்நடை / வனவிலங்குகள் ரயில் தண்டவாளங்களில் அடிபடக் கூடிய இடங்களில், ரயில் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அடிக்கடி விசில் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விலங்குகள் கடந்து செல்லும் இடங்களில் தடுப்பு வேலி அல்லது எல்லைச் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், தண்டவாளங்கள் அருகே உணவுக்கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்கவும், முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். 

மேலும், வனப்பகுதிகள் வழியாக செல்லும் ரயில்பாதைகளில், குறிப்பிட்ட சில இடங்களில் வேகக் கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், யானைகள் மற்றும் பிற விலங்கினங்கள் அப்பகுதியில் இருப்பது குறித்து ரயில் ஓட்டுநர்களை எச்சரிக்கும் விதமாக ஒளிரும் தகவல் பலகைகளை அமைப்பது, விலங்குகள் கடந்து செல்ல ஏதுவாக வனப்பகுதிகளில் சுரங்கப்பாதைகளை அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

********

 


(रिलीज़ आईडी: 1809789) आगंतुक पटल : 180
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , Bengali