இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒலிம்பிக் வாள்சண்டை வீராங்கனை பவானிதேவி உடற்பயிற்சி, சத்தான உணவு குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

மத்திய, மாநில அரசுகள் விளையாட்டுத் துறைக்கு அதிக நிதியை வழங்கி வருகிறது என சாம்பியனைச் சந்தியுங்கள் நிகழ்ச்சியில் பவானிதேவி பேச்சு

Posted On: 25 MAR 2022 4:24PM by PIB Chennai

பள்ளி மாணவர்களிடையே விளையாட்டு, உடல்நலம் ஆகியவை குறித்து ஒலிம்பிக் வீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கையை ஏற்று இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் வாள் சண்டை வீராங்கனை சி. . பவானி சென்னை எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே இன்று உரையாடினார்.

 மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் மத்திய, மாநில கல்வித்துறை சார்பில் நடந்த, இந்த, சாம்பியனை சந்தியுங்கள் நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்ஒலிம்பிக்கில் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், விளையாட்டு வீரர்களுக்கு உணவுப் பழக்க முறை மற்றும் உடற்பயிற்சி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றிக் கலந்துரையாடினார்.

நிகழ்ச்சியில் பேசிய வீராங்கனை பவானி தேவி,

விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார். கொரோனா பெருந்தொற்றால் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள முடியாதோ என்ற பயம் ஏற்பட்டதாகக் கூறிய அவர், 16 வருடங்களாக ஒலிம்பிக் போட்டிக்காகக் கடினமாக உழைத்ததாகவும், தனது தாயார் தனது அனைத்து முயற்சிகளுக்கும் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தனது வாள்வீச்சுப் பயிற்சியை 11 வயதிலேயே தொடங்கியதாகவும், அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்வேன் என்றும் உறுதிபடக் கூறினார். தான் பெண் என்பதால், விளையாட்டுத் துறையில் பல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்தாகவும், விளையாட்டின் மீது கொண்ட ஈடுபாட்டால் தன்னால் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடிந்ததாகவும் தெரிவித்தார். நமது ஊரிலேயே சத்தான பொருட்கள், காய்கறிகள், பழங்கள் கிடைப்பதாகவும், அதனைத் தொடர்ந்து உண்டு, முறையான பயிற்சி எடுத்தாலே விளையாட்டில் சாதிக்க முடியும் என, மாணவர்களை ஊக்கப்படுத்தினார். மேலும் விளையாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், பல்வேறு அதிநவீனப் பயிற்சி மையங்கள், பயிற்சியாளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்றும் தமிழக அரசு விளையாட்டுக்கு ஒதுக்கியுள்ள ரூ.25 கோடியில் வாள்சண்டை பயிற்சி மையம் அமைந்தால் நன்றாக இருக்கும் என்றும் கூறினார். மேலும், விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிக அளவு பட்ஜெட் ஒதுக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அவர்களை உற்சாகப்படுத்திய பவானிதேவி, அவர்களுடன் சிறிது நேரம் பேட்மிண்டன் விளையாடினார்

****



(Release ID: 1809727) Visitor Counter : 172


Read this release in: Hindi , Punjabi , Urdu , English