குடியரசுத் தலைவர் செயலகம்

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி

Posted On: 23 MAR 2022 5:55PM by PIB Chennai

ஆண்டுதோறும் மார்ச் 24-ம் தேதி. உலக காசநோய் தினமாக கடைபிடிக்கப்படுவதை ஒட்டி குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு,

“காசநோய் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 24 மார்ச், 2022 அன்று உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுவதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். 1882-ஆம் ஆண்டு இதே நாளில், காசநோயை உருவாக்கக்கூடிய பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளதாக டாக்டர் ராபர்ட் கோச் அறிவித்தார். இந்த அறிவிப்பு, இந்த கொடிய நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிக்க வழிவகை செய்தது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் மற்றும் கொரோனா தொற்றின் உருமாறிய வகைகள் தோன்றியது, நாட்டின் சுகாதார முறையில் இதுவரைக் கண்டிராத பெரும் சுமையை ஏற்படுத்தியது. அத்துடன் சுகாதார சேவைக் கட்டமைப்பிலும் அசாதாரண சவால்களை ஏற்படுத்தியது. மத்திய மற்றும் மாநில அரசுகள் நமது சுகாதார சேவைப் பணியாளர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகளால் தொடங்கப்பட்ட உலகின் மாபெரும் தடுப்பூசி இயக்கம், பெருந்தொற்றுக்கு எதிரான நமது போராட்டத்திற்கு வலு சேர்த்தது.

பெருந்தொற்றால் ஏற்பட்ட பல்வேறு சவால்களுக்கு இடையிலும், நாடு முழுவதுமுள்ள காச நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய, மாறுபட்ட சூழலுக்கேற்ப வலிமையான தடுப்பு நடவடிக்கைகளை, தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் விரைவாக செயல்பட்டதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய காசநோய் அறிக்கை 2022 வெளியீட்டிற்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். காசநோயை எதிர்த்து போராடி வெற்றி கண்டதுடன் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக திகழும் முன்னோடிகளை இந்த சந்தர்ப்பத்தில் பாராட்ட விரும்புகிறேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி, 2025-க்குள் இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்றுவோம்”.  

***************



(Release ID: 1808850) Visitor Counter : 783