ஜல்சக்தி அமைச்சகம்

கழிவுநீர் மேலாண்மைக்கான சுஜ்லம் 2.0 பிரசாரம் : மத்திய ஜல்சக்தி அமைச்சர் தொடக்கம்

Posted On: 23 MAR 2022 2:07PM by PIB Chennai

கழிவுநீர் மேலாண்மைக்கான சுஜ்லம் 2.0 பிரசாரத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் காணொலி காட்சி மூலம்  தொடங்கி வைத்தார். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு குடிநீர் மற்றும் வடிகால் துறை இந்நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.

இந்நிகழ்ச்சியில் கழிவுநீர் மேலாண்மை குறித்து கூட்டு ஆலோசனை ஒப்பந்தத்தில் ஜல்சக்தி அமைச்சகம் உட்பட மத்திய அரசின்  9 அமைச்சகங்கள் கையெழுத்திட்டன.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவாத் கூறியதாவது:

இந்தாண்டு கருப்பொருள் ‘நிலத்தடி நீர்: கண்ணுக்கு தெரியாததை காணச் செய்வது. நிலத்தடி நீரை நாம் பார்க்க முடியாது. ஆனால் இதன் தாக்கம் அனைத்து இடங்களிலும் தெரிகிறது. இதில் கவனம் செலுத்த சுஜ்லம் 2.0 பிரசாரத்தை ஜல்சக்தி அமைச்சகம் தொடங்கியுள்ளது. மக்கள் பங்களிப்பு மூலம் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்வது தான் இந்த பிரசாரத்தின் நோக்கம்.  இந்த  பிரசாரம் மூலம், மக்கள், பஞ்சாயத்துக்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளை கழிவுநீர் மேலாண்மைக்கு பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். கழிவு நீரை அது உற்பத்தியாகும் இடத்திலேயே சுத்தம் செய்ய முடியும்.  அவற்றை தேங்கவிட்டால், மிகச் பெரிய சவாலாகிவிடும்.  உறிஞ்சு குழிகள் அமைப்பதன் மூலம் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

கழிவுநீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிதியை இரண்டாவது கிராம தூய்மை இந்தியா திட்டம் அல்லது 15வது நிதி ஆணைய மானியம் அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் அல்லது இவை அனைத்தையும் ஒன்றாக இணைத்து திரட்ட முடியும். இந்த பிரசாரம், மக்களை கூட்டாக இணைந்து கழிவுநீர் மேலாண்மை நடவடிக்கைகளில் ஈடுபட வழிவகுக்கும். இதை மாநிலம், மாவட்டம் மற்றும் உள்ளூர் அளவில் மேற்கொள்ள வேண்டும்.

சுஜ்லம் 2.0 திட்டத்தை தூய்மை பணியாளர்கள், சுய உதவிக் குழு தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் உள்ளூர் அளவில் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு மத்திய அமைச்சர் பேசினார்.

கழிவு நீர் மேலாண்மையில், உலகளவில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை, யுனிசெப் அமைப்பின் தண்ணீர் மற்றும் சுகாதாரப் பிரிவு தலைவர் திரு. நிகோலஸ் ஆஸ்பெர்ட் பகிர்ந்து கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808621

                           *************************(Release ID: 1808832) Visitor Counter : 783