குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை எட்டுவதில் கல்வி நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டுமென குடியரசுத் துணைத்தலைவர் வேண்டுகோள்

Posted On: 23 MAR 2022 11:17AM by PIB Chennai

நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை எட்டுவதில் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால், கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள் இதில் பெரும் பங்கு வகிக்க வேண்டுமென குடியரசுத் துணைத்தலைவர் திரு எம். வெங்கைய நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தியப் பல்கலைகழகங்கள் சங்கத்தின் வருடாந்தரக் கூட்டத்தை காணொலி வாயிலாக தொடங்கி வைத்து, ‘உயர்கல்வி நிறுவனங்கள் வாயிலாக நீடித்த இலக்கை அடைதல்’ பற்றிய தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய திரு நாயுடு, தொடக்க, இடைநிலை மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடைவதற்கான செயல் திட்டங்களை உணர்வுப்பூர்வமாக பின்பற்ற வேண்டும் என்றார்.

ஆராய்ச்சி, கொள்கைவகுத்தல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சமூகத்துடன் ஈடுபாடு கொண்டிருத்தல் மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான உத்திகளை திறம்பட செயல்படுத்துதல் போன்ற எண்ணற்ற வழிகளில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பங்காற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2030-ம் ஆண்டுக்குள் நீடித்த வளர்ச்சிக்கான 17 இலக்குகளை அடைவதென்ற ஐநா சபையின் செயல்திட்டம் பற்றி குறிப்பிட்ட அவர், 2021-க்கான நீடித்த வளர்ச்சி இலக்கு அட்டவனையில் இந்தியா 120-வது இடத்தில் இருந்ததாக குறிப்பிட்டார். நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை அடைவதில், வறுமை மற்றும் எழுத்தறிவின்மை போன்ற சவால்களை கடந்து வரவேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் கல்வி நிறுவனங்கள், மக்கள் அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

1050 பல்கலைகழகங்கள், 10,000-ற்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் 42,343 கல்லூரிகளுடன், உயர்கல்வித்துறையில் உலகின் 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்வதாக குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், இவர்கள் அனைவரும் இலக்குகளை எட்ட உரிய பங்களிப்பை வழங்கினால், ஒட்டுமொத்த உலக அரங்கில் பெரும் விளைவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

புதிய தேசிய கல்விக்கொள்கை-2020, ஒரு தொலைநோக்குடன் கூடிய ஆவனம் என்று தெரிவித்த குடியரசுத் துணைத்தலைவர், இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தினால், நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை எட்ட உதவும் என்றும் கூறினார்.

இந்தியப் பல்கலைகழகங்கள், உலகின் முதல் 10 பல்கலைகழகங்கள் பட்டியலில் இடம்பெற வேண்டுமென்ற தமது பேரார்வத்தை வெளிப்படுத்திய திரு வெங்கைய நாயுடு, அனைத்து பல்கலைகழகங்களும் ஆராய்ச்சி, அறிவாற்றலை உருவாக்குதல் உள்ளிட்டவற்றில் சிறந்த பாடத்திட்டத்தை உருவாக்குவதுடன், கட்டமைப்பு வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துவதோடு அனைவருக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமென்றும் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1808516 

***************



(Release ID: 1808660) Visitor Counter : 170