கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய பொருளாதார மண்டலம்
Posted On:
15 MAR 2022 3:11PM by PIB Chennai
சாகர்மாலா திட்டத்தின் தேசிய கண்ணோட்ட திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 3 பொருளாதார மண்டலங்கள் உட்பட 14 கடலோர பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, வேலை வாய்ப்பு உருவாக்கம் மற்றும் துறைமுகம் சார்ந்த தொழில்மயமாக்கல் முன்மாதிரி அடிப்படையில் ஒரு மத்திய பொருளாதார மண்டலத்தை உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் இதனை பரிந்துரைத்துள்ளது. மத்திய பொருளாதார மண்டலத்தை உருவாக்க தேவையான நிலம், பெரிய துறைமுகங்களுக்கு அருகே உள்ளன என்பதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள தேசிய தொழில் வழித்தட மேம்பாடு மற்றும் அமலாக்க டிரஸ்ட், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் சேர்ந்து பசுமை தொழில்மண்டலங்களை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இதன்படி தேசிய பெருந்திட்டத்தின் ஒரு பகுதியாக 11 வழித்தடங்களை உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கிணங்க, விரிவான ஆய்வு மேற்கொண்டு மத்திய பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான பணியை அமைச்சகம் சாகர்மாலா மேம்பாட்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளது.
துணை துறைமுகத்தை அமைக்க இடங்களை சென்னை துறைமுகப் பொறுப்பு கழகம், கண்டறிந்து வரும் சூழலில், நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம் (என்எல்சி) சீர்காழியில் அனல் மின் நிலையம் அமைக்கும் திட்டத்துடன், சென்னை துறைமுகத்தின் நிபுணத்துவத்தை பயன்படுத்தி துறைமுகத்தை உருவாக்க ஆர்வம் காட்டியது. இதற்கு தேவைப்படும் நிலங்கள், நிலக்கரி அளவு, துறைமுகத்தை அமைப்பதற்கான விரிவான விவரங்களை என்எல்சி வழங்கியது. சீர்காழி அருகே துணைத் துறைமுகம் உருவாக்குவதற்கான வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தமும் தயாரிக்கப்பட்டு, கையெழுத்திடுவதற்காக என்எல்சிக்கு 2016-ம் ஆண்டு கடல்சார் இந்திய உச்சிமாநாட்டின் போது அனுப்பப்பட்டது. இருப்பினும் இந்த திட்டத்திற்கு அனுமதி இன்னும் பெறப்படாததால், இத்திட்டத்தை செயல்படுத்தும் காலம் கூடிவரவில்லை என என்எல்சி அறிவித்தது. இதனையடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டு ஒரிசாவில் மின் நிலையம் அமைக்கவிருப்பதாக என்எல்சி அறிவித்தது. இதனால் சீர்காழியில் துறைமுகம் அமைப்பது பாதிக்கப்பட்டது.
இனயத்தில் புதிய பெரிய துறைமுகம் அமைப்பதற்கான கொள்கை அளவிலான அனுமதி அமைச்சகத்தால் 2016 ஜூலை மாதம் வழங்கப்பட்டது. ஆனால் மீனவர் குழுக்கள் மற்றும் உள்ளூர் பொது மக்களின் எதிர்ப்பால் களஆய்வு நடத்தப்படவில்லை. எதிர்ப்பு தொடர்வதால் குளச்சல், மணவாள குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் மாற்று இடங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. கன்னியாகுமரியில் குடியிருப்புகள் இல்லாத கடற்கரை இதற்கு தகுதியான இடமாக கண்டறியப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் புதிய துறைமுகம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு தனியார் துறையின் பங்களிப்பு ஊக்குவிக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி அருகே பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியில் கப்பல் நிற்கும் தளத்தை உருவாக்க ஆர்வம் உள்ள நிறுவனங்களை அறிய 2021 பிப்ரவரி மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் வ.உ.சி துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தை கையில் கொண்டு இந்த அறிவிக்கையை ரத்து செய்யுமாறு அமைச்சகம் உத்தரவிட்டது.
இத்தகவலை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.
***************
(Release ID: 1806198)
Visitor Counter : 246