கூட்டுறவு அமைச்சகம்
குஜராத்தின் சூரத் நகரில் சுமுல் பால் பொருட்கள் திட்டம்: மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
Posted On:
13 MAR 2022 7:45PM by PIB Chennai
குஜராத்தின் சூரத் நகரில் சுமுல் பால்பொருட்கள் திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மத்திய அமைச்சர் திருமதி தர்ஷனா ஜர்தோஷ் மற்றும் குஜராத் முதல்வர் திரு புபேந்திர படேல் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் திரு அமித்ஷா பேசியதாவது:
தெற்கு குஜராத்தின் தபி மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க கூட்டுறவு மாநாடு நடத்தப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான மக்கள் கலந்து கொண்டிருப்பது, குஜராத்தில் கூட்டுறவுக் கட்டமைப்பு எவ்வளவு வலுவாக உள்ளது என்பதற்குச் சான்றாக உள்ளது. சுதந்திரத்தின் 100வது ஆண்டில் கூட்டுறவு இயக்கங்களை வலுப்படுத்தி, உலகிலேயே மிகவும் வலுவான கூட்டுறவு இயக்கமாக மாற்றுவதுதான் நமது இலக்கு. 71 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய சுமுல் நிறுவனம் 200 லிட்டர் பாலை விற்பனை செய்தது. இன்று அந்நிறுவனம் 20 லட்சம் லிட்டர் பாலை விற்பனை செய்கிறது. இந்த பால் உற்பத்தியில் பழங்குடியின ஆண்கள், பெண்களின் பங்களிப்பு அதிகம். பழங்குடியினப் பெண்களின் கடின உழைப்பால் ரூ.7 கோடி மதிப்பிலான பால் தினசரி விற்கப்படுகிறது. இந்தப் பணம் 2.5 லட்சம் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதுதான் சுமுல் நிறுவனத்தின் கீழ் திரு த்ரிபுவன் படேல் முயற்சியின் கீழ் குஜராத்தில் உருவாக்கப்பட்ட கூட்டுறவின் அதிசயம்.
சுமுல் பிராண்ட் தற்போது உலகளாவிய பிராண்டாக மாறி ரூ.53,000 கோடி வருவாய் ஈட்டுகிறது. இது கூட்டுறவு இயக்கத்தின் பலத்தை பிரதிபலிக்கிறது.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு. அமித்ஷா பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1805574
**********
(Release ID: 1805589)