உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
இந்தூர்-கோண்டியா-ஐதராபாத் வழித்தடத்தில் உதான் திட்டத்தின் கீழ் தினசரி விமான போக்குவரத்து தொடக்கம்
Posted On:
13 MAR 2022 7:35PM by PIB Chennai
பிராந்திய இணைப்புச் சேவை உதான் திட்டத்தின் கீழ், இந்தூர் -கோண்டியா-ஐதராபாத் வழித்தடத்தில் தினசரி விமானப் போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது. இத்துடன் சேர்த்து உதான் திட்டத்தின் கீழ் 409 வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படும்.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா, மத்தியப் பிரதேச முதல்வர் திரு சிவராஜ் சிங் சவுகான் (காணொலி மூலம்), மக்களவை முன்னாள் சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்யா எம். சிந்தியா, சாதாரண மக்களுக்கும் விமானச் சேவைகள் வழங்கும் பிரதமரின் கனவை உதான் திட்டம் நிறைவேற்றுகிறது எனக் கூறினார்.
உதான் திட்டத்தின் கீழ் 405 வழித்தடங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார். இந்தூர் -கோண்டியா- ஐதராபாத் வழித்தடம் இந்தூரை மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுடன் இணைக்கிறது என்றார்.
கடந்த ஓராண்டில் இந்தூரிலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் இருமடங்காகவும், போபாலில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் 40 சதவீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.
இரண்டாம் நிலை மற்றும் 3ம் நிலை நகரங்களில் 100 புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் எனவும், இது தொலை தூரப் பகுதிகளின் இணைப்பை மேலும் ஊக்குவிக்கும் எனவும் திரு ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.
இந்தூர் -கோண்டியா-ஐதராபாத் வழித்தடத்தில், 78 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் ரக விமானத்தை, விமான நிறுவனம் தினசரி இயக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திk குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1805571
********
(Release ID: 1805583)
Visitor Counter : 244