மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பெங்களூரில் உள்ள காலியம் நைட்ரைடு தொழில்நுட்ப மையம்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆய்வு

Posted On: 13 MAR 2022 4:11PM by PIB Chennai

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையத்தில் அமைந்துள்ள காலியம் நைட்ரைடு மையம் மற்றும் இன்குபேட்டர் வசதியை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பார்வையிட்டார்.  இந்த மையத்தை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் மையம் ஆகியவை இணைந்து உருவாக்கியது. காலியம் நைட்ரைடு அடிப்படையிலான மேம்பாட்டு வசதியை ஏற்படுத்தும் நோக்கில் மின் மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்காக இது உருவாக்கப்பட்டது.

இந்த மையத்தை ஆய்வு செய்தபின், மத்திய அமைச்சர் பேசுகையில், ‘‘ மின்சார வாகனங்கள் மற்றும் வயர்லெஸ் தகவல் தொடர்பு பயன்பாட்டில், காலியம் நைட்ரைடு முக்கிய பங்காற்ற அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகள் நல்ல வாய்ப்பு உள்ளது ’’ என்றார்.   

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப யுக்தி திறன்களை உருவாக்குவதுதான், கடந்த 2015ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியால்  தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நோக்கங்களை அடைய மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், 1000 நாட்கள் என்ற தொலைநோக்கு திட்டத்தை வகுத்துள்ளது என்றும்,  இதில் ஹைடெக் மற்றும் யுக்தி தொழில்நுட்பம் முக்கிய அம்சமாக உள்ளது என்றும் அமைச்சர்  திரு. ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

 5ஜி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டில் காலியம் நைட்ரைடுத் தொழில்நுட்பம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றும் அவர் கூறினார். 

சமீபத்தில் ஏற்பட்ட கோவிட் இடையூறுகளால் உலக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகளையும், அதைப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு வாய்ப்பாகப் பயன்படுத்தி, உலக நாடுகள் எதிர்பார்த்த புதிய விநியோக சங்கிலியாக மாற்றிய அனுபவம் குறித்தும் மத்திய அமைச்சர் பேசினார்.

மின்னணுவியல் உற்பத்தி மற்றும் செமிகன்டக்டர் வடிவமைப்பு ஆகியவற்றில் பிரம்மாண்ட வாய்ப்பு இருப்பதையும், இந்தியாவில் செமி கண்டக்டர் ஆலைகள் ஏற்படுத்துவதற்கும், இந்தியாவை மின்னணுக் கருவிகள் மற்றும் உற்பத்தி மையமாக மாற்ற 10 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஊக்குவிப்பு திட்டம் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதையும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திர  சேகர் குறிப்பிட்டார்.

இந்திய அறிவியல் மையத்தில் உள்ள காலியம் நைட்ரைடு டிரான்சிஸ்டர்களையும் மத்திய அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805535

***********



(Release ID: 1805572) Visitor Counter : 249