நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட 1032 பிரஸர் குக்கர் மற்றும் 936 ஹெல்மெட்டுகளை இந்திய தர நிர்ணய அமைவனம் பறிமுதல் செய்தது
Posted On:
12 MAR 2022 3:53PM by PIB Chennai
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து எச்சரிக்கும் விதமாக, மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐஎஸ்ஐ முத்திரையில்லாத மற்றும் மத்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட பொருட்களை நுகர்வோர் வாங்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 06.12.2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிக்கையில், தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட ஹெல்மெட், பிரஸர் குக்கர் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை வாங்க வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தொழில்துறை சங்கங்கள், சட்ட சேவையாளர்கள், நுகர்வோர் சங்கங்கள் ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டது.
நுகர்வோரையும், அவர்களுக்கான உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில், தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி விற்பனை செய்வோர் அல்லது அதில் தொடர்புடையோர் மீது வழக்குப்பதிவு செய்ய மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுபோன்ற வீட்டு உபயோகப் பொருட்களை யாராவது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
தரக்கட்டுப்பாட்டு விதிகளை மீறி தயாரிக்கப்பட்ட 1032 பிரஸர் குக்கர் மற்றும் 936 ஹெல்மெட்டுகளையும் இந்திய தர நிர்ணய அமைவனம் பறிமுதல் செய்தது. பிஐஎஸ் விதிகளை மீறி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதோ அல்லது தயாரிக்கப்படுவதோ நுகர்வோருக்கு தெரிந்தால், அது பற்றி அவர்கள் https://www.services.bis.gov.in:8071/php/BIS_2.0/. என்ற இணைய தளத்தில் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய நுகர்வோர் உதவி எண்ணான 1800-11-4000 அல்லது 14404 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805333
***************
(Release ID: 1805351)