குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சட்டமன்றங்கள் அடிக்கடி கூடுவதுடன், அதிக நாட்களுக்கும் நடைபெற வேண்டுமென்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தியுள்ளார்

Posted On: 10 MAR 2022 1:37PM by PIB Chennai

வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட மாநில சட்டமன்றங்கள், அடிக்கடி கூடுவதுடன், அதிக நாட்களுக்கும் நடைபெற வேண்டுமென்று குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார். அப்போது தான் மக்கள் நலம் சார்ந்த விஷயங்களை விவாதிக்கவும், சட்டங்களை போதிய கால அவகாசத்துடன் நிறைவேற்றவும், நிர்வாகத்தின் பொறுப்புடமையை உறுதி செய்யவும் முடியுமென்றும் அவர் கூறியுள்ளார்.

 மிசோரம் சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர், சட்டமன்ற கூட்டத் தொடர்கள், நீண்ட அவகாசத்தில் திட்டமிடப்பட்டு கூட்டப்படவேண்டுமென்றும், அப்போது தான் சட்டங்களை இயற்றவும், விவாதிக்கவும் போதிய அவகாசம் கிடைக்குமென்றும் கூறினார். சட்டமன்றங்களை அதிக நாட்களுக்கு கூட்டி ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

மாநில சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் புதிய இந்தியாவை வடிவமைப்பதற்கான செயல்திறன் கொண்ட கருவிகளாக மாற வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார். சில சட்டமன்றங்களில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து கவலை தெரிவித்த திரு நாயுடு, அரசியல் சாசன பதவிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  சட்டமன்ற உறுப்பினர்கள் அர்த்தமுள்ள விவாதத்தில் பங்கேற்ற வேண்டுமே தவிர அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். மக்களின் விருப்பங்களை கேட்டு அதற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் அறிவுறுத்தினார். 

 நாடாளுமன்றத்திலும், வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல்வேறு மாநிலங்களிலும் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத் தலைவர் சட்டம் இயற்றுதலில் பெண்களுக்கும் அதிக பங்கு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  மிசோரம், நாகலாந்து ஆகிய சட்டமன்றங்களில் ஒரு பெண் உறுப்பினர் கூட இல்லை என்று குறிப்பிட்ட அவர், மணிப்பூர், திரிபுரா சட்டமன்றங்களின் முறையே 2 மற்றும் 5 உறுப்பினர்கள்  உள்ளதாக தெரிவித்தார்.

1986-ம் ஆண்டு ஏற்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் காரணமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக மிசோரம் மாநிலத்தில் நிலவிய அமைதியின்மை முடிவுக்கு வந்ததை சுட்டிக்காட்டிய திரு நாயுடு, பேச்சு வார்த்தையின் ஆற்றல், அமைதியான தீர்வு ஆகியவை ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியம் என்பதை மிசோரம் காட்டியுள்ளது என தெரிவித்தார்.  மிசோரம் அமைதி ஒப்பந்தம் பிற ஒப்பந்தங்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதாக அவர் கூறினார்.

 இந்த நிகழ்ச்சியில் மிசோரம் ஆளுநர் டாக்டர் ஹரிபாபு கம்பம்பட்டி, முதலமைச்சர் திரு சோரம் தங்கா, சட்டப்பேரவைத் தலைவர் திரு லால் ரின்லியானா சைலோ, துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

***************



(Release ID: 1804760) Visitor Counter : 229