மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
சுதந்திர போராட்ட வீரர்கள், மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கு மரியாதை செலுத்த மீன்வளத்துறை அமைச்சகத்தின் ‘சாகர் பரிக்ரமா’ என்ற கடல் சுற்றுப் பயண நிகழ்ச்சி குஜராத்தில் தொடக்கம்
Posted On:
02 MAR 2022 6:29PM by PIB Chennai
சுதந்திர போராட்ட வீரர்கள், மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, மீன்வளத்துறை அமைச்சகம் சார்பில் மேற்கொள்ளப்படும் ‘சாகர் பரிக்ரமா’ என்ற கடல் சுற்றுப் பயண நிகழ்ச்சி குஜராத்தில் மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது.
இந்திய பெருங்கடல் பகுதி கடலோர மாநிலங்களின் பொருளாதாரம், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு முக்கியமானதாக உள்ளது. நாட்டின் கடலோர பகுதி 8,118 கி.மீ தூரத்துக்கு உள்ளது. இதில் 9 கடல்சார் மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் அடங்கியுள்ளது. இது லட்சக்கணக்கான மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை அளிக்கிறது. கடலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை முன்னிட்டு நமது சுதந்திர போராட்ட வீரர்கள், மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் கடல் சுற்றுப் பயண நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் பயணம் குஜராத்திலிருந்து மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது. இந்த 2 நாள் நிகழ்ச்சியின் போது, கடலோர மாவட்டங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடல் சுற்றுப் பயண நிகழ்ச்சி கொண்டாடப்படும். குஜராத், டையூ, மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், அந்தமான், நிகோபார் மற்றும் லட்சத்தீவுகளில் மீனவர்களின் பிரச்சினைகளை அறிய அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
முதல் கட்ட கடல் சுற்றுப் பயணம் குஜராத் மாண்டவியில் தொடங்கி போர்பந்தரில் மார்ச் 6ம் தேதி முடிவடையும். மாண்டவியில் உள்ள சியாமிஜி கிருஷ்ண வர்மா நினைவு அரங்கில் மீன்வளத்துறையுடன் இணைந்து மீனவ பிரதிநிதிகள் கடல் சுற்றுப் பயண நிகழ்ச்சியை கொண்டாடுவர். மத்திய மீன்வளத்துறை அமைச்சர் திரு. பர்சோத்தம் ரூபாலா உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.
இந்நிகழ்ச்சியில் பிரதமரின் மத்ஸ்ய சம்பதா திட்ட சான்றிதழ்கள், ஒப்புதல்கள், மீனவர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் ஆகியவை வழங்கப்படும்.
இதே போன்ற நிகழ்ச்சிகள் இதர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடுத்தடுத்த கட்டங்களில் நடத்தப்படும்..
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802384
************
(Release ID: 1802450)
Visitor Counter : 190