வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

தூய்மை கணக்கெடுப்பு 2022 தொடக்கம், களப்பணியில் சுமார் 3,000 மதிப்பீட்டாளர்கள்

Posted On: 02 MAR 2022 3:51PM by PIB Chennai

உலகின் மிகப்பெரிய நகர்ப்புற தூய்மைக் கணக்கெடுப்பின் ஏழாவது பதிப்பிற்கான கள மதிப்பீடான ஸ்வச் சர்வேக்ஷன், 1 மார்ச் 2022 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.

'மக்கள் முதலில்' எனும் தத்துவத்தை முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பட்ட ஸ்வச் சர்வேக்ஷன் 2022, துப்புரவுத் தொழிலாளர்களின் ஒட்டுமொத்த நலன் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விடுதலையின் அமிர்தப் பெருவிழாவால் உந்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, மூத்த குடிமக்கள் மற்றும் இளைஞர்களின் குரல்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு, நகர்ப்புற இந்தியாவின் தூய்மையை நிலைநிறுத்துவதில் அவர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும்.

மக்கள் பங்கேற்பை பெரிய அளவில் ஊக்குவிக்கும் அதே வேளையில் சுகாதார நிலையை மேம்படுத்த நகரங்களை ஊக்குவிக்கும் ஒரு போட்டி கட்டமைப்பாக 2016-ல் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் ஸ்வச் சர்வேக்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவின் நகரங்களுக்கிடையில் ஆரோக்கியமான போட்டிக்கு இது வழிவகுத்தது.

73 நகரங்களோடு மட்டும் 2016-ல் தொடங்கிய இப்பயணம், 2017-ல் 434 நகரங்கள், 2018-ல் 4,203 நகரங்கள், 2019-ல் 4,237 நகரங்கள், 2020-ல் 4,242 நகரங்கள், 2021-ல் 4,320 நகரங்களை சென்றடைந்தது. 62 கண்டோன்மென்ட் வாரியங்களும் இதில் அடங்கும்.

1 மார்ச் 2022 அன்று சுமார் 3,000 மதிப்பீட்டாளர்களுடன் அமைச்சகம் இக்கணக்கெடுப்பை தொடங்கியது. இப்ஸாஸ் ரிசர்ச் பிரைவேட் லிமிடெட் கணக்கெடுப்பு முகமை ஆகும். முந்தைய ஆண்டுகளில் 40% வார்டுகளில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில், இப்போது 100% வார்டுகளில் மாதிரி எடுக்கும் வகையில் கணக்கெடுப்பின் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த லட்சியப் பயிற்சியை தடையின்றி செயல்படுத்த, கடந்த ஆண்டு கள மதிப்பீட்டிற்காக பயன்படுத்தப்பட்டதை விட அதிக எண்ணிக்கையிலான மதிப்பீட்டாளர்கள் இந்தாண்டு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802316

************



(Release ID: 1802413) Visitor Counter : 268


Read this release in: English , Urdu , Hindi , Gujarati