அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

புத்தாக்க ஸ்டார்ட்-அப்களைத் கண்டறிந்து, வழிகாட்டி, நிலைநிறுத்த மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு: அறிவியல்,தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒரு ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை வலியுறுத்தினார்

Posted On: 26 FEB 2022 11:21AM by PIB Chennai

புத்தாக்க ஸ்டார்ட்-அப்களைக்  கண்டறிந்து, வழிகாட்டி, நிலைநிறுத்தவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்-அப் சூழலியலை உருவாக்கவும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று அழைப்பு விடுத்தார்.

இந்தியாவின் 75 ஆண்டுகால சுதந்திரத்தைக் கொண்டாடும் விடுதலையின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, அறிவியல் மற்றும் தொழிலியல்  ஆராய்ச்சிக் குழு (சிஎஸ்ஐஆர்) ஏற்பாடு செய்த தேசிய அளவிலான அறிவியல் படைப்பாற்றல் போட்டியான “சிஎஸ்ஐஆர் ஜிக்யாசா விக்யான் மஹோத்சவ் 2022 ன் வெற்றியாளர்களை அறிவித்த பிறகு அமைச்சர்  பேசினார்.

மாணவர்களுக்கு சிஎஸ்ஐஆர் ஜிக்யாசா குழு தொடர்ந்து வழிகாட்ட வேண்டும் என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார். இதன் மூலம் 2047-ஐ  நோக்கிய வலுவான அடித்தளங்களை அவர்கள் அமைப்பதோடு, பல்வேறு சவால்களைஎதிர்கொள்ளவும், உலகளாவிய தலைவர்களாக  மாறவும் இந்தியாவுக்கு உதவுவார்கள். வருங்காலத்  தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஈடுபடுத்துவதும், நமது நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்துவதும் மிகவும் முக்கியமானது இந்த நடவடிக்கை என்று அவர் கூறினார்.

2022 ஜனவரி 3-ம் தேதி தொடங்கப்பட்ட சிஎஸ்ஐஆர் ஜிக்யாசா விக்யான் மஹோத்சவ் 2022,  முகாம்கள் மூலம் நாடு முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களைச்  சென்றடைந்தது குறித்து டாக்டர் ஜிதேந்திர சிங் திருப்தி தெரிவித்தார். எரிசக்தி, சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு, பருவநிலை மாற்றம், நீர் பாதுகாப்பு, பேரிடர் தணிப்பு மற்றும் வேளாண் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் எதிர்காலக்  கருப்பொருட்களுடன் கூடிய 7 பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

டாக்டர் ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், விஞ்ஞானம், படைப்பாற்றல் மற்றும் யோசனைகளின் கலவையானது 2047-ம் ஆண்டிற்கு நாம் திட்டமிட்டுள்ள நாட்டின் எதிர்காலப்  பார்வையை நோக்கிய ஒரு படியாகும என்றார். அறிவியல் கருத்துகளின் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் சிஎஸ்ஐஆர்-ன் பங்கை அவர் பாராட்டினார். மாணவர்களால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம், மற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஜிக்யாசா இணையதளம் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1801289

 ***************

 

 


(Release ID: 1801423) Visitor Counter : 238