குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சிறந்த ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் துப்புரவு அவசியமென குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
Posted On:
23 FEB 2022 5:07PM by PIB Chennai
தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (WASH) குறித்த தேசிய மாநாடு 2022-ஐ குடியரசு துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு, இன்று சென்னை ஆளுநர் மாளிகையிலிருந்து காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தார். மாநாட்டில் உரையாற்றிய அவர், நோய்களைத் தடுப்பதற்கும், மக்களின் ஒட்டுமொத்த நலவாழ்விற்கு பங்களிப்பு வழங்குவதிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் துப்புரவு போன்ற அடிப்படை வசதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கொவிட் பெருந்தொற்று பாதிப்பு குறைந்து வருவதாகக் கருதி, மக்கள் கவனக்குறைவாக இருந்துவிடக் கூடாது என்று எச்சரித்த அவர், மக்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை கைவிட்டுவிடக் கூடாது என்றும், அடிக்கடி கை கழுவுவதை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
ஆரோக்கியமான – உடல் திடகாத்திரமான மற்றும் உணர்ச்சிபூர்வமான சூழலில் குழந்தைகள் வளர வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக, பாதுகாக்கப்பட்ட குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் போன்ற முன்னெச்சரிக்கை சுகாதார சேவைகள் குறித்து அங்கன்வாடிகள் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் இருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் குறித்த இந்த மாநாட்டை, ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் நிறுவனம் மத்திய ஜல்சக்தி அமைச்சகம், பஞ்சாயத் ராஜ் அமைச்சகம், யுனிசெப் மற்றும் வளர்ச்சித் திட்டம் குறித்த பிற பங்குதாரர்களுடன் இணைந்து நடத்துகிறது. இந்த மாநாட்டில், ‘பஞ்சாயத்துகளில் தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது’ குறித்து கவனம் செலுத்தப்படும்.
கிராமப்புற குடிநீர் விநியோகத்திற்கு, WASH செயல் திட்டத்தை கிராமப் பஞ்சாயத்துகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியம் பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, குக்கிராமம் வரை சேவைகளை திறம்பட கொண்டு சேர்க்க பஞ்சாயத்துக்களை, அமைப்பு ரீதியாக வலுப்படுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
“ஆளுகையின் முக்கிய அம்சமாக இதனை நான் எப்போதும் வலியுறுத்தி வருகிறேன் – அனைத்துத் துறைகளின் சேவைகளையும், குக்கிராமம் வரை திறம்பட கொண்டுசேர்க்க வேண்டும் – ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கு இது அவசியம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு தேசம் என்ற முறையில், அனைத்து வீடுகளுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் – மிக முக்கியமாக குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் சார்ந்த வசதிகள் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் குடியரசு துணைத்தலைவர் தெரிவித்தார். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் துப்புரவு சேவைகளை வழங்குவது பெரும் செயல் என்று குறிப்பிட்ட திரு நாயுடு, “ஒரே குறிக்கோள் மற்றும் உறுதிப்பாட்டுடன் ஏராளமானோர் இணைந்து செயல்படுவதன் மூலமே இது சாத்தியமாகும்” என்று கூறினார்.
கிராமப்புற குடிநீர் விநியோகக் கட்டமைப்பு நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டு வருவது பற்றி குறிப்பிட்ட திரு நாயுடு, இதனை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். “ப்ளம்பர்கள், எலக்ட்ரீஷியன்கள், தண்ணீரில் குளோரினைக் கலக்கப் பயிற்சி பெற்றவர்களுக்கு அதிக தேவை உள்ளது” பற்றி கூறிய அவர், பழுதுபார்ப்பு மற்றும் திடீர் கோளாறுகளை சரிசெய்வதற்கான திறன்பயிற்சி பெற்ற மனிதவளத் தேவைகளை பூர்த்தி செய்வதில் சிறந்த நடைமுறையை மேற்கொண்டு வரும் வடஐரோப்பிய (ஸ்கேண்டிநேவியன்) நாடுகளின் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து கற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.
நாட்டின் அதிமுக்கிய விவகாரத்திற்காக இந்த மாநாடு நடத்தப்படுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த குடியரசு துணைத்தலைவர், பல்வேறு இந்திய மொழிகளிலும் தண்ணீர் என்ற வார்த்தை, “ஜீவன், உயிர் என்பதன் பொருள்” - உடன் தொடர்புடையதாக இருப்பதையும் சுட்டிக்காட்டினார். ‘வாழ்க்கைக்கு தண்ணீர்’ அவசியம் என்ற வார்த்தை அடிக்கடி சுட்டிக்காட்டப்படுவது பற்றிக் குறிப்பிட்ட அவர், “பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்த வார்த்தையின் பின்னால் உள்ள முக்கியத்துவத்தை உண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்துள்ளனர் – எனவே நாமும், பல நூற்றாண்டுகளாக உயிர் கொடுக்கும் ஜீவ நதிகளை நாடு முழுவதும் வணங்கி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் போதுமான அளவு கிடைப்பது அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்ட திரு நாயுடு, இந்த விவகாரத்தில் இந்தியா, குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் அடைந்துள்ளது என்று கூறினார். இதனை மேலும் விரைவுப்படுத்துவதோடு, கிராமப்புறங்களிலும். நகர்ப்புறங்களிலும் குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்வதில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தண்ணீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசின் முன்முயற்சிகளைப் பாராட்டிய அவர், “.இந்தத்துறையில் நாம் அடையும் முன்னேற்றம், வளர்ச்சிப்பணிகள் தொடர்பான மற்ற குறியீடுகளில் எதிரொலிக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டிய குடியரசு துணைத்தலைவர், மோசமான துப்புரவு செயல்பாடுகளால் பல கிராமங்களில் நிலத்தடி நீர் ஆதாரங்கள் மாசடைந்து வருவது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். மேலும், பொறுப்பான செயல்பாடுகள் மூலம், கழிவுகளை அங்கும் இங்கும் வீசிச் செல்லும் பழக்கத்தை தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முக்கியமான இந்தப் பிரச்சனை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்பதோடு, இதனை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்தத் தொடக்கவிழாவின் போது மாநாட்டு மலர் ஒன்றையும் குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார். மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டாக்டர் ஜி. நரேந்திர குமார் இந்தியாவுக்கான யுனிசெப் பிரதிநிதி திருமதி கில்லியன் மெல்சாப், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் நிறுவனத்தின் சிஆர்ஐ தலைவர் டாக்டர் ஆர் ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-------
(Release ID: 1800584)
Visitor Counter : 851