புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து வாங்க வேண்டும் என எந்த மாநிலத்தையும் மத்திய அரசு வற்புறுத்தவில்லை : மத்திய மின்துறை அமைச்சர் விளக்கம்

Posted On: 15 FEB 2022 5:57PM by PIB Chennai

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து  வாங்க வேண்டும் என மத்திய அரசு வற்புறுத்துவதாகதெலங்கானா முதல்வர் ஜன்கான் மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.

இது பொய்யான தகவல், மத்திய மின்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் விளக்கம் அளித்துள்ளார்.  இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை, எந்த நிறுவனத்திடமிருந்தும்  மாநிலங்கள்  ஏலம் அடிப்படையில் பெற்றுக் கொள்ளலாம். இந்திய சூரிய எரிசக்தி நிறுவனமும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விநியோகத்துக்கு அவ்வப்போது ஏலம் நடத்துகிறது. இந்த ஏலங்களுக்கு அதிக போட்டியுள்ளது. பல நிறுவனங்களும் போட்டியிடுகின்றன. குறைந்த கட்டணத்தை தெரிவிக்கும் நிறுவனங்கள் வெளிப்படையான ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன. அதன்பின் மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி அந்த ஏலங்களின் அடிப்படையிலும், தேவைக்கேற்ப மின்சாரத்தை வாங்கி கொள்ளலாம். ஏலத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் மின்சாரத்தை வாங்குவதா, வேண்டாமா என்பது முற்றிலும் மாநிலங்களின் சொந்த முடிவு. அதனால், தெலங்கானா முதல்வர் தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் பொய்யானது.

 

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வாங்குவதை  பொறுத்தவரை, படிம எரிபொருளில் இருந்து, படிமம் அல்லா எரிபொருளுக்கு மாற வேண்டும் என்பது பல நாடுகள் செய்து கொண்ட சர்வதேச உறுதிப்பாட்டின் ஒரு  பகுதி.  மாசு அதிகரிப்பால் சுற்றுச்சூழல் மோசமாகி, புவி வெப்பம் அதிகரிப்பது பற்றி உலகநாடுகள் கவலைப்படுகின்றன. கார்பன் உமிழ்வு இல்லாத வகையில் எரிசக்தி திட்டங்களை உருவாக்க முக்கிய பொருளாதார நாடுகள் அனைத்தும் உறுதி பூண்டுள்ளன.  2050ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லா இலக்கை அடைய வளர்ந்த நாடுகள் உறுதி பூண்டுள்ளன. 2070ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைய இந்தியா உறுதி பூண்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்காக, படிமம் அல்லா எரிசக்தி வளங்களுக்கு மாறுவது இந்த உறுதிப்பாட்டின் ஒரு பகுதி.

 

நீர்மின்சக்தி திட்டம் பற்றியும் தெலுங்கானா முதல்வர் பேசியுள்ளார்.  அவர் குறிப்பிட்டுள்ள நீர்மின்சக்தி திட்டம், மத்திய அரசின் நிறுவனங்களான பிஎப்சி மற்றும் ஆர்இசி அளிக்கும் கடன்கள் மூலம் கட்டப்படுகிறது. காலேஸ்வரம், பாலமூரு மற்றும் இதர திட்டங்களுக்கு பிஎப்சி மற்றும் ஆர்இசி நிறுவனங்கள் ரூ.55,000 கோடி கடன் அளித்துள்ளன. இந்த திட்டங்களுக்காக, மத்திய அரசுக்கு அவர் நன்றி கூற  வேண்டும்.

 

விவசாயிகளுக்கு அளிக்கப்படும் மின்சாரத்தை அளவிடும்படி மாநிலங்களை, மத்திய அரசு வற்புறுத்துவதாகவும் தெலங்கானா முதல்வர் கூறியுள்ளார். இதுவும் முற்றிலும் பொய்.

இது போன்ற பொய்யான மற்றும் ஆதாரமற்ற கருத்துக்கள், கவுரவமான முதல்வர் பதவி வகிக்கும் நபருக்கு உகந்ததல்ல.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு ஆர்.கே.சிங் கூறியுள்ளார்.

                                                                                                *****************


(Release ID: 1798598) Visitor Counter : 259