குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் இராட்டை புரட்சியால், பிரபலமைடைந்தது காதி: நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குடியரசுத்தலைவரும் குறிப்பிட்டார்

Posted On: 03 FEB 2022 4:13PM by PIB Chennai

காதி கிராம தொழில் ஆணையம்(கேவிஐசி) கடந்த 7 ஆண்டுகளில் தொடங்கிய ‘இராட்டை புரட்சியால் காதி அதிவேக வளர்ச்சியடைந்தது, பட்ஜெட் கூட்டத்தொடரின் குடியரசுத் தலைவர் உரையிலும் இது இடம் பிடித்தது. காந்திய சிந்தனைகளை இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பிரபலப்படுத்த பல இராட்டை நினைவு சின்னங்களை கேவிஐசி உருவாக்கியது. இது காதியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது.   காதியின் வெற்றியை கடந்த ஜனவரி 31ம் தேதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.  காந்தியடிகளின் 74வது தியாகிகள்  தினத்தை முன்னிட்டு, அகமதாபாத்தில் சமர்பதி ஆற்றங்கரையில் மகாத்மா காந்தியின் 100 சதுர மீட்டர் சுவரோவியத்தை திறந்து வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் காதியின் வெற்றி குறித்து பேசினார்.

காதி கிராம தொழில் ஆணையம் கடந்த 1956ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால், காதி, இராட்டை மற்றும் மகாத்மா காந்தியுடன் தொடர்புடைய இதர சின்னங்களை பிரபலப்படுத்த  , 2014ம் ஆண்டு வரை, கேவிஐசி எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. 2014ம் ஆண்டுக்கு பிறகுதான், காதி, காந்திய சிந்தனைகள், காந்தியின் இராட்டை ஆகியவற்றை உலகம் முழுவதும்  பிரபலப்படுத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு முயற்சி மேற்கொண்டது.

கடந்த 7 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய மரம் மற்றும் எஃகு இராட்டை நினைவுச் சின்னங்களை கேவிஐசி உருவாக்கியது. உலகின் மிகச்சிரிய இராட்டைகளை கைக்கடிகாரங்களில் பொருத்தியது. காந்திஜியின் மிகப் பெரிய சுவரோவியம், காதி துணியால் செய்யப்பட்ட உலகின் மிகப் பெரிய தேசியக்கொடி, பாரம்பரிய இராட்டை அருங்காட்சியகம் உட்பட பலவற்றை கேவிஐசி உருவாக்கியது. ஆங்கில ஆட்சியை எதிர்த்து போராட இராட்டைதான் காந்திஜியின் ஆயுதமாக இருந்தது. இந்த இராட்டை கடந்த 2017ம் ஆண்டுதான் முதல் முறையாக வெளிநாடு சென்றது. அதன்பின் காந்தியின் இராட்டை 60 நாடுகளைச் சென்றடைந்தது.

‘‘ காதி மற்றும் இராட்டை இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் பிரபலம் அடைய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் உத்வேகத்துடன் வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இது காதியின் உற்பத்தியை அதிகரித்து காந்தியின் கனவை நனவாக்கியது. இராட்டை புரட்சி நடவடிக்கையால் 55,000 நவீன இராட்டைகள் தயாரிக்கப்பட்டன. இது நாடு முழுவதும் உள்ள காதி கலைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்தது. ’’ என காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் தலைவர் திரு. வினய் குமார் சக்சேனா கூறினார். 

உலகின் மிகப் பெரிய மர இராட்டை புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு, அப்போதைய பிஜேபி தலைவர் அமித்ஷாவால் நிறுவப்பட்டது. அதன்பின் நாட்டின் பல இடங்களில் இராட்டை நினைவுச்  சின்னங்கள் திறக்கப்பட்டன. உகாண்டாவில் கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி இராட்டை நினைவுச் சின்னம் திறக்கப்பட்டது. வெளிநாட்டு மண்ணில் ஏற்படுத்தப்பட்ட முதல் இராட்டை நினைவுச் சின்னம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

2014-ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை காதி உற்பத்தியை அதிகரிக்க 55,000 புதிய மாடல் இராட்டைகள் மற்றும் 9000 நவீன தறிகள் காதி கலைஞர்களுக்கு வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1795078

**********



(Release ID: 1795263) Visitor Counter : 198