அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
‘‘வீரர்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சியில்’’ ட்ரோன்கள் மூலம் வானில் ஒளிக் கண்காட்சி நடத்திய ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் பாராட்டு
Posted On:
02 FEB 2022 6:49PM by PIB Chennai
குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, தில்லி விஜய் சவுக்கில் கடந்த ஜனவரி 29ம் தேதி, 1000 ட்ரோன்கள் மூலம் வானில் ஒளிக் கண்காட்சி நடத்தி பார்வையாளர்களை அசத்திய ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் இன்று பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ‘போட்லேப்’ ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் நிறுவனர்கள் சரிதா அஹ்லாவத், தன்மேபங்கர், அனுஜ் குமார் பன்வல் ஆகியோர் தங்கள் குழுவினர் சுமார் 30 பேருடன் கலந்து கொண்டனர். அவர்களைத் தனித்தனியாக மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் பாராட்டினார்.
ட்ரோன் திட்டம் தொடங்கப்பட்ட 6 மாதத்துக்குள், இந்த வராலாற்று சிறப்பு மிக்க சாதனை படைத்ததற்காக போட்லேப் குழுவினரைப் பாராட்டிய மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங், இந்த வியக்கத்தக்க இளம் குழுவினரை கண்டறிந்தததற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தன்னைத்தானே பாராட்டி கொள்வதாகத் தெரிவித்தார். இந்தக் குழுவினரைக் கவுரவிப்பது நாட்டுக்கு பெருமிதம் என்றும் அவர் கூறினார். இது, நாடு முழுவதும் புதைந்துள்ள திறன்களைக் கண்டறிந்து, அவற்றை வளர்க்க ஆதரவு அளிக்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிய அணுகுமுறையைத் தெரிவிக்கிறது என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற புதுமையான ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்க, ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்க வேண்டும் என மூத்த அதிகாரிகளுக்கு டாக்டர் ஜித்தேந்திர சிங் உத்தரவிட்டார். நாட்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க, ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பது, புதுமையான திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துவது, நிதியுதவி அளிப்பது தொடர்பான விஷயங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்தி குறிப்பை காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1794830
----
(Release ID: 1794872)
Visitor Counter : 164