தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு 15 சிறப்புப் பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது

தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக அவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது

Posted On: 01 FEB 2022 4:31PM by PIB Chennai

கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின்  சட்டமன்றங்களுக்கான தற்போதைய 2022 பொதுத் தேர்தல்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்புப் பார்வையாளர்களுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று ஒரு விளக்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. 

அப்பழுக்கற்ற, சிறப்பாகப் பணி புரிந்த, தத்தமது துறைகளில், நிபுணத்துவம் வாய்ந்த, தேர்தல் செயல்முறைகளில் முன் அனுபவம் உள்ள முன்னாள் அரசு ஊழியர்கள் – இந்திய குடிமைப்பணி அதிகாரிகள் பதினைந்து பேர் , தற்போது தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கான சிறப்புப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்பு பார்வையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள்  மேற்கொள்ளும் பணிகளை மேற்பார்வை செய்து கண்காணிப்பார்கள்.  உளவுத்துறை உள்ளீடுகள், சி-விஜில், வாக்காளர் உதவி இணைப்பு - ஹெல்ப்லைன் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் கடுமையான, பயனுள்ள அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வார்கள். சுதந்திரமான, நியாயமான, வாக்காளர்களுக்கு இணக்கமான தேர்தலை உறுதி செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் கண்களாகவும், காதுகளாகவும் செயல்பட்டு ஒட்டுமொத்தத்  தேர்தல் செயல்முறைகளையும் இந்த அதிகாரிகள் கண்காணிப்பார்கள்.

சிறப்புப் பார்வையாளர்களை வரவேற்றுப் பேசிய  தலைமைத் தேர்தல் ஆணையர் திரு.சுஷில் சந்திரா, சிறப்பு பார்வையாளர்களை தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு அனுப்புவதன் முக்கிய நோக்கம், தேர்தல் தயார்நிலையைப்  பாரபட்சமற்ற முறையில் மதிப்பிடுவது, முக்கியமான இடைவெளிகளைக் கண்டறிந்து, பாரபட்சமற்ற, தூண்டுதலற்ற, அமைதியான, கோவிட் பாதுகாப்பான தேர்தலை உறுதிசெய்யத்  தேர்தல் இயந்திரங்களை வழிநடத்துவதாகும் என்றார். ஒவ்வொரு தேர்தலும் அதற்கேயுரிய சொந்த பிரச்னைகளும், சவால்களும் கொண்டு தனித்துவம் வாய்ந்தது. இருப்பினும் அதிக வாக்குப்பதிவு ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று திரு. சந்திரா சுட்டிக்காட்டினார். எனவே சிறப்புப் பார்வையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்; தேர்தல் செயல்முறை முழுவதும் அப்போதைக்கு அப்போது என்ற  அடிப்படையில்  தேர்தல் ஆணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்; தேவைப்படும் திருத்த நடவடிக்கைகளை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்றார். பாதிக்கப்படக்கூடிய அனைத்து பகுதிகளும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் போதுமான நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர்களுக்கு எவ்விதத் தொந்தரவும்  இல்லாத அனுபவத்தை வழங்க இந்திய தேர்தல் ஆணையம் விரும்புகிறது என்றும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதிசெய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் ஒவ்வொரு தேர்தல் மையத்திலும் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மூத்த குடிமக்களுக்கு - 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கு அஞ்சல் வாக்குச் சீட்டு வசதி அளிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள் கோவிட் நெறிமுறைக்கு இணங்கவும், வாக்காளர்களுக்கு உகந்ததாகவும் மாற்றப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையர் திரு. ராஜீவ் குமார் கூறுகையில், கள நிலவரத்தை மதிப்பிடுவதற்கும், அனைத்து பங்குதாரர்களிடையே சமநிலையை உறுதி செய்வதற்கும், தேவையான திருத்த நடவடிக்கைகளை எடுப்பதற்கும், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளிலிருந்து விலகுவதைத் தடுப்பதற்கும் தங்கள் ஆழ்ந்த நிர்வாக அனுபவம், புத்திசாலித்தனம், புரிதல் ஆகியவை கொண்ட சிறப்புப் பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்துக்கு முக்கியம் என்றார். இந்திய தேர்தல் ஆணையத்தின். சிறப்புப் பார்வையாளர்கள், களத்தில்  ஆணையத்தின் முகமாக, தேர்தல் செயல்முறைகளை சுமுகமாக நடத்துவதை உறுதிசெய்ய, களத்தில் உள்ள மத்திய பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் இயந்திரங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று திரு.குமார் கூறினார். இந்த மூத்த அதிகாரிகளின் பாரபட்சமற்ற தன்மை, நேர்மை, தெரிவுநிலை, அணுகல், எச்சரிக்கையுணர்வு ஆகியவை ஆணையத்தின் அறிவுறுத்தல்களை எழுத்தாலும் செயலாலும் நடைமுறைப்பபடுத்துவதை உறுதி செய்கிறது என்று திரு குமார் சுட்டிக்காட்டினார்.

*********

 


(Release ID: 1794515) Visitor Counter : 236