உள்துறை அமைச்சகம்

மத்திய பட்ஜெட் தொலைநோக்கு பார்வை கொண்டது என்று கூறியுள்ள மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, இந்த பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை மாற்றியமைக்கக் கூடியது என்று தெரிவித்துள்ளார்

Posted On: 01 FEB 2022 5:34PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் குறித்து உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் இந்த பட்ஜெட் இந்தியாவை தற்சார்பு நாடாக மாற்றுவதுடன் நாட்டின் 100-வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும் வேளையில், புதிய இந்தியாவை படைக்க அடித்தளமிடுவதாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். பட்ஜெட் மதிப்பீட்டை ரூ.39.45 லட்சம் கோடி அளவுக்கு அதிகரித்திருப்பது, கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்திலும் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதை எடுத்துக் காட்டுவதாகவும் திரு அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

நிதிப்பற்றாக்குறை இலக்கை 6.9 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக குறைத்திருப்பதே பெரும் சாதனை என்று கூறியுள்ள உள்துறை அமைச்சர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான இந்தியாவால், நிதிப்பற்றாக்குறையை 4 சதவீதத்திற்கும் குறைவாக  கொண்டுவர முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  தற்சார்பு இந்தியாவுக்கான இந்த பட்ஜெட், இந்தியாவை உலகின் முன்னணி பொருளாதார நாடாக மாற்ற உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். கொவிட் பெருந்தொற்று  பாதிப்புக்கு பிறகு உலக அளவில் எழுந்த சவால்களை இந்தியா ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல தசாப்தங்களாக கூட்டுறவுத்துறைக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி திரு நரேந்திர மோடியால் களையப்பட்டு, பிற துறைகளுக்கு இணையாக கூட்டுறவுத்துறை மேம்பாட்டிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.   முதலீடு இல்லாத சாகுபடி, இயற்கை விவசாயம், நதிகள் இணைப்பு, ஒரு இடத்தில் ஒரு பொருள் உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான ட்ரோன் போன்றவை நமது விவசாயிகளுக்கு பலன் அளிப்பதுடன் இந்திய வேளாண் துறையை நவீனப்படுத்தி தற்சார்புடையதாக மாற்றுவது என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டை செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் உள்துறை அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

மூலதன முதலீட்டை 35% உயர்த்தி. ரூ. 7.5 லட்சம் கோடி  அளவுக்கு  அதிகரித்திருப்பதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடியை பாராட்டுவதாகவும் திரு அமித் ஷா  தெரிவித்துள்ளார். மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.15,000 கோடியிலிருந்து ரூ. 1,00,000 கோடியாக உயர்த்தியிருப்பது கூட்டாட்சி கட்டமைப்பை வலுப்படுத்துவது என்ற திரு நரேந்திர மோடியின் முயற்சிகளுக்கு சான்றாக அமைந்துள்ளது  என்றும் அவர் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் அஞ்சல் அலுவலகங்களை வங்கி நடைமுறையுடன் இணைப்பது, உள்ளார்ந்த நிதிச் சேவையை ஊக்குவிப்பதோடு, கிராமப்புற மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு பெரிதும் பலனளிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் வங்கிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வரவேற்றுள்ளார்.

 

வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு மோடி அரசு எப்போதும் உயர் முன்னுரிமை அளித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ள  உள்துறை அமைச்சர், வடகிழக்கு மாநிலங்களுக்கான பிரதமரின் வளர்ச்சித் திட்டம், அம்மாநிலங்களை வளமாக்குவது என்ற  பிரதமர் மோடியின் கனவை, நனவாக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது என்ற பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, ரூ.60,000 கோடி செலவில் 3.83 கோடி வீடுகளுக்கு தூய்மையான குடிநீர், குழாய் மூலம் வழங்கப்படுவதுடன், பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ரூ.48,000 கோடி செலவில் 80 லட்சம் ஏழைகளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தையும் திரு அமித் ஷா வரவேற்றுள்ளார்.

***************



(Release ID: 1794488) Visitor Counter : 202