பிரதமர் அலுவலகம்

மணிப்பூரின் 50-வது மாநில தினத்தன்று பிரதமர் வழங்கிய உரையின் தமிழாக்கம்

Posted On: 21 JAN 2022 11:16AM by PIB Chennai

வணக்கம்!

மணிப்பூர் உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், மக்களுக்கு வாழ்த்துக்கள் !

ஒரு மாநிலமாக மணிப்பூர் இன்று சாதித்திருப்பதற்குப் பின்னால் எத்தனையோ பேரின் விடாமுயற்சியும் தியாகமும் இருக்கிறது. அத்தகைய ஒவ்வொரு நபருக்கும் நான் மரியாதையுடன் தலைவணங்குகிறேன். கடந்த 50 ஆண்டுகளில் மணிப்பூர் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டுள்ளது. மணிப்பூர் மக்கள் ஒவ்வொரு கணமும் ஒற்றுமையாக வாழ்ந்து அனைத்து சூழ்நிலைகளையும் எதிர்கொண்டுள்ளனர். இதுவே மணிப்பூரின் உண்மையான பலம். உங்களின் எதிர்பார்ப்புகள், லட்சியங்கள் மற்றும் தேவைகள் குறித்து கடந்த ஏழு வருடங்களாக நேரில் வந்து நான் அறிந்து வருகிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளையும் உணர்வுகளையும் என்னால் நன்றாகப் புரிந்துகொள்ளவும், உங்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான புதிய வழிகளைக் கண்டறிய இதுவும் ஒரு காரணம். பிரச்சினைகளில் இருந்து மணிப்பூர் விடுதலையாகி அமைதி நிலவ வேண்டும் என்பதே மக்களின் முக்கிய லட்சியமாக இருந்து வந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு பிரேன் சிங் அவர்களின் தலைமையில் மணிப்பூர் மக்கள் இதைச் சாதித்ததில் இன்று நான் மகிழ்ச்சியடைகிறேன். வளர்ச்சி என்பது மணிப்பூரின் அனைத்துப் பகுதிகளையும் எந்தப் பாகுபாடுமின்றி இன்று சென்றடைகிறது. தனிப்பட்ட முறையில் இது எனக்கு மிகுந்த மனநிறைவை அளிக்கும் விஷயம்.

நண்பர்களே,

மணிப்பூர் தனது திறனை வளர்ச்சியில் ஈடுபடுத்தி வருவதையும், அதன் இளைஞர்களின் திறன் உலக அரங்கில் பிரகாசிப்பதையும் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விளையாட்டுக்  களத்தில் மணிப்பூரின் மகன்கள் மற்றும் மகள்களின் ஆர்வத்தையும் லட்சியத்தையும் பார்க்கும்போது, ஒட்டுமொத்த நாடும் பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது. மணிப்பூர் இளைஞர்களின் திறனைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தை நாட்டின் விளையாட்டு சக்தியாக மாற்றுவதற்கான முயற்சியை எடுத்துள்ளோம். நாட்டின் முதல் தேசிய விளையாட்டுப்  பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் பின்னணிக்  காரணம் இதுவே. விளையாட்டு, விளையாட்டுக் கல்வி, விளையாட்டு மேலாண்மை மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த முயற்சி இதுவாகும். விளையாட்டு மட்டுமல்ல, ஸ்டார்ட்-அப்கள் மற்றும் தொழில் முனைதலிலும் மணிப்பூரின் இளைஞர்கள் அதிசயங்களைச் செய்து வருகின்றனர். சகோதரிகள், மகள்களின் பங்கு இதிலும் பாராட்டுக்குரியது. மணிப்பூரின் கைவினைத் திறனை வளப்படுத்துவதில் அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

'ஆக்ட் ஈஸ்ட்' கொள்கையின் மையமாக வட கிழக்கை மாற்றுவதில் மணிப்பூரின் பங்கு முக்கியமானது. முதல் பயணிகள் ரயிலுக்காக நீங்கள் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. இவ்வளவு நீண்ட காலத்திற்குப் பிறகு, பல தசாப்தங்களுக்குப் பிறகு ரயில் சேவைகள் மணிப்பூரை வந்தடைந்துள்ளன, இந்த கனவு நனவாகும் போது, இரட்டை இயந்திர அரசே அதற்கு காரணம் என்று ஒவ்வொரு மணிப்பூர் குடிமகனும் கூறுகிறார். அத்தகைய அடிப்படை வசதிக்கு பல தசாப்தங்கள் ஆனது. ஆனால் இப்போது மணிப்பூரில் இணைப்புக்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இன்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான இணைப்புத் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. ஜிரிபாம்-துபுல்-இம்பால் ரயில் பாதையும் இதில் அடங்கும். இதேபோல், இம்பால் விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து கிடைத்துள்ளதால், தில்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூருவுடன் வடகிழக்கு மாநிலங்களின் இணைப்பு மேம்பட்டுள்ளது. இந்தியா-மியான்மர்-தாய்லாந்து முத்தரப்பு நெடுஞ்சாலையிலும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வடகிழக்கில் 9,000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் இயற்கை எரிவாயுக் குழாய்களின் பலனை மணிப்பூரும் பெறப் போகிறது.

சகோதர சகோதரிகளே,

50 வருடப்  பயணத்திற்குப் பிறகு இன்று மணிப்பூர் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. விரைவான வளர்ச்சியை நோக்கிய பயணத்தை மணிப்பூர் தொடங்கியுள்ளது. தற்போது  தடைகள் நீங்கிவிட்டன. நமது நாடு சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும் போது, மணிப்பூரின் முழு மாநிலமாகி 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும். எனவே, மணிப்பூரின் வளர்ச்சிக்கும் இதுவே சிறந்த காலமாகும். மணிப்பூரின் வளர்ச்சியை நீண்ட காலமாக  புறக்கணித்த சக்திகளுக்கு மீண்டும் தலை தூக்க வாய்ப்புக் கிடைக்கக் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இனி அடுத்த பத்தாண்டுகளுக்கு புதிய கனவுகளோடும் புதிய தீர்மானங்களோடும் முன்னேற வேண்டும். குறிப்பாக இளைய மகன்கள் மற்றும் மகள்களை முன்னேறக் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் பிரகாசமான எதிர்காலம் குறித்து நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். வளர்ச்சியின் இரட்டை இயந்திரத்துடன்  மணிப்பூர் வேகமாக முன்னேற வேண்டும். மணிப்பூரின் என் அன்பான சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள்!

மிக்க நன்றி!

குறிப்பு: பிரதமர் இந்தியில் வழங்கிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு இதுவாகும்.  

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கிலச்  செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1791387 

**********



(Release ID: 1792221) Visitor Counter : 157