பிரதமர் அலுவலகம்

“விடுதலையின் அமிர்தப் பெருவிழாவிலிருந்து இந்தியாவின் பொற்காலத்தை நோக்கி" என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை

Posted On: 20 JAN 2022 3:27PM by PIB Chennai

வணக்கம், ஓம் சாந்தி!

விடுதலையின் அமிர்தப் பெருவிழாவிலிருந்து பொற்கால இந்தியாவை நோக்கிய பயணத்துக்கான மிகப்பெரும் பிரச்சாரத்தை பிரம்ம குமாரிகள் அமைப்பு இன்று தொடங்கியுள்ளது.

நண்பர்களே,

சுதந்திரப் போராட்டத்தில் லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் பெண்கள் அளித்த பங்களிப்பை இன்று தேசம் மொத்தமும்  நினைவுகூர்கிறது. இதன் காரணமாக, சைனிக் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்ற கனவை நமது மகள்கள் நனவாக்கி வருகின்றனர். நாட்டின் எந்தவொரு பெண்ணும், நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்காக ராணுவத்தில் சேர்த்து, முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள முடியும். மகப்பேறு விடுப்பு அதிகரிப்பு போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டு, பெண்களின் வாழ்க்கையும் எதிர்காலமும் தடையில்லாமல் தொடர்கிறது.

நாட்டின் ஜனநாயகத்தில் கூட பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆண்களைவிட பெண்கள் எந்த அளவுக்கு அதிகமாக வாக்களித்தார்கள் என்பதை நாம் கண்டுள்ளோம். நாட்டின் அரசில் முக்கிய பொறுப்புகளையும் பெண் அமைச்சர்கள் இன்று கையாண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, இந்த மாற்றத்துக்கு சமூகமே தலைமைவகிக்கிறது. அண்மையில் வெளியான தரவுகளின்படி, பல்வேறு ஆண்டுகளுக்குப் பிறகு, பாலின விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கல்வி அளிப்போம் பிரச்சாரத்தின் மூலம் இந்த வெற்றி சாத்தியமானது. இந்த மாற்றங்கள், புதிய இந்தியா எவ்வாறு இருக்கும் மற்றும் இதன் சக்தி எவ்வாறு இருக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றன.

நண்பர்களே,

இந்த நிகழ்ச்சியில் மற்றொரு விவரம் குறித்து நான் பேச விரும்புகிறேன். இந்தியாவின் பெயரைக் கெடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சர்வதேச அளவிலும்கூட மிகப்பெரும் அளவில் முயற்சி நடைபெறுகிறது. இது வெறும் அரசியல் என்று கூறி நாம் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. இது அரசியல் இல்லை. இது நமது நாடு பற்றிய கேள்வி .இந்தியாவின் உண்மையான வடிவத்தை உலகுக்கு புரியவைக்க வேண்டியதும் கூட நமது கடமை.

உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள அமைப்புகள், அங்குள்ள மக்களிடம் இந்தியாவின் உண்மையான நிலையை எடுத்துரைக்க வேண்டும். இந்தியா குறித்து வதந்தி பரவுவதை எடுத்துரைத்து, அதனை அறிந்துகொள்ளச் செய்ய வேண்டும். இது நம் அனைவரின் பொறுப்பும் கூட. இதனை முன்னோக்கி எடுத்துச் செல்ல பிரம்ம குமாரிகள் போன்ற அமைப்புகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் நீங்கள் செயல்படுத்திவரும் கிளையின் மூலம், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 500 பேரை சந்தித்து இந்தியாவின் உண்மை நிலையை எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் 500 பேரும், அந்த நாட்டு குடிமக்களாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஓம் சாந்தி!

பொறுப்பு துறப்பு: இது பிரதமர் உரையின்  தோராயமான மொழிபெயர்ப்பு. உண்மையான உரை இந்தியில் அமைந்திருந்தது.

                                *****************



(Release ID: 1791653) Visitor Counter : 454