வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
முதல் ஸ்டார்ட் அப் இந்தியா புதுமைகள் வார நிகழ்ச்சியை ஜனவரி 10 முதல் 16 வரை மத்திய அரசு நடத்தவிருக்கிறது
Posted On:
09 JAN 2022 4:01PM by PIB Chennai
முதல் ஸ்டார்ட் அப் இந்தியா புதுமைகள் வார நிகழ்ச்சியை ஜனவரி 10 முதல் 16 வரை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை நடத்தவிருக்கிறது. காணொலி மூலம் நடக்கவிருக்கும் இந்த விழா இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திரத்தை குறிக்கும் விடுதலையின் அமிர்த பெருவிழாவை கொண்டாடுவதோடு, நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ள தொழில்முனைதலை காட்சிப்படுத்தும்.
40-க்கும் அதிகமான முன்னணி புதிய நிறுவனங்கள் (யூனிகார்ன்) 2021-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், 2021-ம் வருடம் யூனிகார்ன்களின்
ஆண்டு என்று அழைக்கப்படுகிறது.
உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலியலை கொண்டுள்ள இந்தியா, உலகின் புதுமைகளுக்கான மையமாக உருவாகி வருகிறது. 61,000-க்கும் அதிகமான புதிய நிறுவனங்களை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்பு துறை இதுவரை அங்கீகரித்துள்ளது. நாட்டின் 633 மாவட்டங்களில் 55 துறைகளில் இந்த நிறுவனங்கள் பரவியுள்ள நிலையில் 2016-ம் ஆண்டு முதல் ஆறு இலட்சம் வேலை வாய்ப்புகளை இவை உருவாக்கியுள்ளன.
இவற்றில் 45 சதவீத ஸ்டார்ட் அப்புகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் உருவாகி இருப்பதோடு பெண் தொழில் முனைவோரை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. சர்வதேச மதிப்பு சங்கிலிகளில் இந்தியாவின் நிலையை இவை உயர்த்துவதோடு உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
நாட்டின் முன்னணி புதிய நிறுவனங்கள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், வழிகாட்டுதலை வழங்குபவர்கள், நிதி வழங்கும் அமைப்புகள், வங்கிகள், கொள்கைகளை உருவாக்குபவர்கள் மற்றும் இதர தேசிய/சர்வதேச பங்குதாரர்களை ஒன்றாக இணைப்பதே இந்த ஸ்டார்ட் அப் மற்றும் புதுமைகள் திருவிழாவின் முதன்மை நோக்கமாகும்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் இந்திய அரசின் பல்வேறு துறைகள் உள்ளிட்டவை ஒரு வார காலம் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்கும். பல்வேறு அமர்வுகள் இந்த விழாவின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் பங்குபெற விரும்புபவர்கள் https://www.startupindiainnovationweek.in என்ற இணைப்பில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1788760
****
(Release ID: 1788773)
Visitor Counter : 350