உள்துறை அமைச்சகம்

தில்லி தேசிய தலைநகர பிராந்தியத்தில் கொவிட்-19 நிலவரம் மற்றும் ஆயத்தநிலை குறித்து மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது

Posted On: 07 JAN 2022 10:18AM by PIB Chennai

கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு, குறிப்பாக தில்லி- தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் உருமாற்றமடைந்த ஓமிக்ரான் பாதிப்பு குறித்து, மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தில்லி மற்றும் அதன் எல்லையில் அமைந்துள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த ஒன்பது மாவட்டங்களில் கொவிட்-19 நிலவரம் மற்றும் ஆயத்தநிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.  

தலைநகரப் பிராந்தியத்தின் பின்னப்பட்ட நகர்ப்புற அமைப்பு சூழலைக் கருத்திற்கொண்டு, தில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டுமென உள்துறை செயலாளர் வலியுறுத்தினார்.   தில்லி-தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் கொவிட்-19 பெருந்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.  

இந்தக் கூட்டத்தின்போது, உருமாற்றமடைந்த ஓமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், உடணடியாக மேற்கொள்வதோடு, கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துமாறு அவர் தெரிவித்தார்.  மாநில மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள், பொது இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில், கொவிட்-19 நெறிமுறைகளான முகக்ககவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார். 

தில்லி-தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், அதிகரிக்கும் தேவைகளை சமாளிக்க ஏதுவாக, சுகாதாரக் கட்டமைப்புகளை உடணடியாக வலுப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.   மேலும், ஆக்ஸிஜன் வினியோக சாதனங்கள் முகூழுமையாக செயல்படுவதை உறுதி செய்வதோடு, அத்தியாவசிய மருந்துப்பொருட்களை, போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. 

தில்லி-தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், பரிசோதனைகளை அதிகப்படுத்துமாறும் உள்துறை செயலாளர் கேட்டுக்கொண்டார்.  தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி, மேலும் பரவாமல் தடுப்பதற்கான அனைத்து நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கும் புத்துயிரூட்ட வேண்டும். 

இந்தக் கூட்டத்தில், நித்தி ஆயோக் (சுகாதார) உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் மற்றும் மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் தில்லி மாநில தலைமைச் செயலாளர்கள்/கூடுதல் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தில்லி தேசிய தலைநகரப் பிராந்தியம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.   

***************



(Release ID: 1788296) Visitor Counter : 259