குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத் துணைத் தலைவர் முதல் முறையாக லட்சத்தீவிற்கு அரசுமுறைப் பயணம்.

காட்மட் மற்றும் ஆந்த்ரோத் தீவுகளில் இரண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை திறந்துவைத்தார்.

லட்சத்தீவுகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி தேசத்தின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது: குடியரசுத் துணைத் தலைவர்.

Posted On: 01 JAN 2022 3:37PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கைய்யா நாயுடு முதல் முறையாக லட்சத்தீவு யூனியன் பிரதேசத்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். காட்மட் மற்றும் ஆந்த்ரோத் தீவுகளில் இரண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அவர் இன்று திறந்துவைத்தார்.

காட்மட் தீவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய திரு. நாயுடு, இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக லட்சத்தீவுகளுக்கு தனது முதல் அரசுமுறைப் பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு ஆகியவற்றின் தனித்துவமான சங்கமமாக லட்சத்தீவு பெருமை கொள்கிறது என்று அவர் கூறினார்.

இரண்டு கல்லூரிகளைத் திறந்து வைத்த திரு. நாயுடு, தீவுகளைச் சேர்ந்த மாணவர்கள், குறிப்பாகப் பெண்கள் , இப்பகுதியின் புவியியல் கட்டுப்பாடுகளைக் கடந்து, வேலை வாய்ப்புடன் கூடிய தரமான உயர்கல்வியைத் தொடர இந்த கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள் உதவும் என்று கூறினார். இக்கல்லூரிகள், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர், மாணவர்களிடையே திறன் மேம்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இத்தீவுகளில்  உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்க திறன் மேம்பாடு தொடர்பான பல குறுகிய கால பாடப்பிரிவுகளை தொடங்குமாறு நிர்வாகத்திற்கு அவர் அறிவுறுத்தினார்.

தேசத்தின் வளர்ச்சிக்கு லட்சத்தீவுகளின் வளர்ச்சி இன்றியமையாதது என்று குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தினார்.

தீவுகளில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு முழுமையான தடையை அமல்படுத்தியதற்காக லட்சத்தீவு மக்கள் மற்றும் நிர்வாகத்தின் உறுதியை திரு. நாயுடு வெகுவாக பாராட்டினார். இரண்டு ஆண்டுகளில் இத்தீவுகள், 100 சதவீத பசுமை ஆற்றல் அடைவதை நோக்கி பயணிப்பதையும் அவர் பாராட்டினார்.

மக்களின் வாழ்வாதாரத்தை குறித்து பேசுகையில், திரு. நாயுடு, மக்கள் தங்களின் திறன்களை மேம்படுத்தி, உலகத் தரத்துடன் இன்றைய தேவைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ளவேண்டியதின் உடனடித் தேவையை எடுத்துரைத்தார்.

****

 


(Release ID: 1786809) Visitor Counter : 298