குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

மாநில மொழிகளில் சிறந்த அறிவியல் தகவல்களுக்குக் குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்

தேசிய கணித தினத்தையொட்டி இந்திய விஞ்ஞானிகளின் ஓராண்டு கால நூற்றாண்டு கொண்டாட்டத்தைத் தொடங்கி வைத்த குடியரசுத் துணைத் தலைவர், ஸ்ரீனிவாச ராமானுஜன் மற்றும் பிறருக்குப் புகழாரம் சூட்டினார்

Posted On: 22 DEC 2021 6:41PM by PIB Chennai

தங்களின் தாய்மொழியில் மக்களைச் சென்றடைவதற்கும், அவர்களிடம்  அறிவியல் ஆர்வத்தை மேம்படுத்துவதற்கும் சிறந்த அறிவியல் தகவல்களை மாநில மொழிகளில் வெளியிட வேண்டியதன் அவசியத்தைக் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். 

தேசிய கணித தினத்தையொட்டி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மக்களிடையே அறிவியல் ஆர்வத்தையும்,  கேள்வி கேட்கும் உணர்வையும் மேம்படுத்துவது, அடிப்படைக் கடமையாக அரசியல் சட்டத்தில் பட்டியலிடப்பட்டு இருப்பதை நினைவு கூர்ந்தார்.  புத்தகங்கள், தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள் மூலம் அறிவியலை பிரபலப்படுத்தும் முயற்சிகளை அதிகரிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். 

இந்தியாவின் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் பிறந்த நாளான டிசம்பர் 22 ஒவ்வொரு ஆண்டும் தேசிய கணித தினமாக கொண்டாடப்படுகிறது.  ராமானுஜனின் பங்களிப்பை நினைவுகூர்ந்த திரு நாயுடு, தேசத்தின் கட்டமைப்பில் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் கணித மேதைகளின் பங்களிப்பை அங்கீகரிப்பது நமது கடமை என்பதை வலியுறுத்தினார்.

1922-ல் பிறந்த ஹர் கோவிந்த், குரானா, ஜி என் ராமச்சந்திரன், யெலவர்த்தி நாயுடம்மா, பாலசுப்பிரமணியம் ராமமூர்த்தி, ஜி எஸ் லதா, ராஜேஸ்வரி சாட்டர்ஜி ஆகிய 6 விஞ்ஞானிகளுக்கும் திரு நாயுடு புகழாரம் சூட்டினார்.  இந்திய விஞ்ஞானிகளின் நூற்றாண்டை ஓராண்டு காலத்திற்கு  நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் கொண்டாட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

இந்த நிகழ்ச்சியில்  மத்திய அரசின்  முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே  விஜயராகவன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ஸ்ரீவாரி சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் தகவல்களுக்குஇந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784302

••••••••••••••

 
 
 


(Release ID: 1784351) Visitor Counter : 208