நிதி அமைச்சகம்

மேற்கு வங்கத்தில் வருமான வரித்துறை சோதனை நடவடிக்கை

Posted On: 21 DEC 2021 1:34PM by PIB Chennai

அசன்சோலை சேர்ந்த இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், உள்கட்டமைப்பு, சிமெண்ட், பாலி ஃபேப்ஸ், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகிய வணிகங்களில் ஈடுபட்டுள்ள இரண்டு முக்கிய குழுமங்களில் 16.12.2021 அன்று சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையை வருமான வரித் துறை மேற்கொண்டது. மேற்கு வங்கத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வளாகங்களில் தேடுதல் நடைபெற்றது.

எஸ்டி அட்டைகள், வாட்ஸ்அப் பரிமாற்றங்கள் போன்றவற்றில் சேமிக்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவு வடிவிலான ஏராளமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன. கணக்கில் காட்டப்படாத விற்பனை குறித்த தகவல்கள், உண்மையான உற்பத்தித் தரவுகளின் எக்செல் தாள்கள், கணக்குகளின் கோப்புகள், பல்வேறு தரப்பினருக்கு செய்யப்பட்ட பணப்பரிமாற்ற விவரங்கள் போன்றவற்றை தேடல் குழு கண்டறிந்துள்ளது.

இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் உரிமையாளர்களின் முக்கிய பணியாளர்களால் கையாளப்பட்ட கணக்கில் வராத பணத்தை, கைப்பற்றப்பட்ட எஸ்டி கார்டுகள் மற்றும் தொடர்புடைய ஆதாரங்களின் ஆரம்ப ஆய்வு வெளிப்படுத்துகிறது. கணக்கில் வராத வருமானம் ரூ 66 கோடிக்கு மேல் இருப்பதை ஒரு குழுவின் முக்கிய நபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

வேறு சில நிறுவனங்களில், ஆதாரமற்ற கொள்முதல் உரிமைகோரல் தொடர்பான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றில் ரூ. 20 கோடியை கணக்கில் காட்டப்படாத வருமானமாக இயக்குநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். போலி நிறுவனங்கள் குறித்த தகவல்களும் அவற்றின் மூலம் ரூ. 40 கோடி பரிமாற்றமும் கண்டறியப்பட்டுள்ளது.

சோதனையின் போது ரூ. 2 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கணக்கில் வராத பணத்தின் மதிப்பு ரூ 125 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1783764

****



(Release ID: 1783966) Visitor Counter : 251