குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

எழுத்தறிவின்மை இல்லாமையை சாதிப்பது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் – குடியரசுத் துணைத்தலைவர்

Posted On: 19 DEC 2021 12:55PM by PIB Chennai

வயது வந்தோர் கல்வி மற்றும் தொழில்திறன் பயிற்சி, அரசின் முயற்சிகளுக்கு உதவியாக இருந்து, அவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்ல தனியார் துறை உள்ளிட்ட அனைத்து பங்கேற்பாளர்களும் முன்வர வேண்டும் என்று குடியரசு துணைத்தலைவர் திரு எம்.வெங்கய்ய நாயுடு இன்று வலியுறுத்தினார்.  வயது வந்த ஒவ்வொருவரும் எழுத்தறிவு பெற வேண்டிய தேவையை வலியுறுத்திய அவர், பொதுமக்களிடம் டிஜிட்டல் கல்வி அறிவு மற்றும் நிதிசார் கல்வி அறிவு ஆகியவற்றை உருவாக்க வேண்டிய தேவையில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மதிப்பு மிகுந்த நேரு மற்றும் தாகூர் எழுத்தறிவு விருதுகளை இன்று புது தில்லியில் வழங்கிய பிறகு பங்கேற்பாளர்களிடம் பேசிய குடியரசு துணைத்தலைவர் ஐடி, டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பல்வேறு துறைகளில் நாம் அளப்பறிய மாற்றத்தை ஏற்படுத்தி இருந்த போதிலும் உலகிலேயே கல்வியறிவு பெறாத மக்களின் எண்ணிக்கை அதிக அளவில் இந்தியாவில் இருப்பது என்பது வருத்தத்தக்க விஷயம் என்று குறிப்பிட்டார்.  இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அவசரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குறிப்பட்ட அவர் எழுத்தறிவு இயக்கமானது மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.  கிராமங்கள் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கல்வியறிவு பெற்ற ஒவ்வொரு இளைஞரும் தங்கள் இருப்பிடங்களில் அல்லது சமுதாயங்களில் உள்ளவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்காவது எழுதப் படிக்கக் கற்றுத் தருவதோடு டிஜிட்டல் கருவிகளை இயக்கவும் அரசு நலத்திட்டங்கள் மூலம் பலன் பெறும் வழிமுறைகளை எடுத்துக் கூறவும் வேண்டும் என குடியரசு துணைத்தலைவர் கேட்டுக் கொண்டார்.  இதனை அவர் அவர்களின் பிஎஸ்ஆர் – தனிநபர் சமூக பொறுப்பு எனக் குறிப்பிட்டார்.. 
எழுத்தறிவின்மையை இல்லாமல் ஆக்குகின்ற செயல்பாடானது ஒரு இயக்கத்தை நிறைவேற்றுவது போன்று வேகமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட திரு. நாயுடு, மாணவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் வார இறுதி நாட்களில் வயது வந்தோருக்கு எழுத்தறிவை கற்றுத் தரும் பணியை துவக்கி நடத்த அவர்களின் பள்ளிக்கூடங்கள் அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்ற ஆலோசனையையும் வழங்கினார்.  இத்தகைய சேவைப் பணிகளுக்காக மாணவர்களுக்கு கூடுதலான மதிப்பெண்களை வழங்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்தார். 
வயது வந்தோர் கல்விக்காக, குறிப்பிடத்தக்க பங்காற்றியமைக்காக விருது பெற்ற அனைவரையும் பாராட்டிப் பேசிய குடியரசு துணைத்தலைவர் ஒவ்வொருவரும் இந்தியாவை முழுமையான எழுத்தறிவு பெற்ற மற்றும் கல்வியறிவு பெற்ற தேசமாக மாற்ற வேண்டும் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.தொழில் திறன் கல்விக்கு முன்நிபந்தனையாக எழுத்தறிவு உள்ளதை சுட்டிக்காட்டிய குடியரசுத் துணைத்தலைவர் இது ஒருவரிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதோடு அவரது சமூக வாழ்க்கையை மேலும் ஆக்கரீதியானதாகவும், கௌரவம் மிக்கதாகவும் மாற்றுவதற்கு உதவுகிறது எனத் தெரிவித்தார்.
தொடக்க கல்வி நிலையில் முழுமையான அளவில் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதத்தை இந்தியா அடைவதற்கு உதவிய அனைத்து பங்குதாரர்களையும் பாராட்டிய குடியரசுத் துணைத்தலைவர், தொடக்க கல்வி நிலையில் சிறுவர்களைவிட சிறுமிகள் அதிக எண்ணிக்கையில் பள்ளிக்கூடங்களில் சேர்வது என்ற உண்மையானது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
வயது வந்தோர் கல்வியின் பல்வேறு அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் தருகின்ற புதிய கல்விக் கொள்கை – 2020ஐ பாராட்டிய திரு. நாயுடு இந்த அணுகுமுறையானது சமூக – பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாட்டுக்கான வாழ்நாள் முழுவதுக்குமான வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் புதிய பகுதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது என்று குறிப்பிட்டார்..நேரு மற்றும் தாகூர் எழுத்தறிவு விருதுகள் பெற்றவர்களை பாராட்டிய குடியரசு துணைத்தலைவர் அவர்கள்  கல்வி பெற்ற மற்றும் அதிகாரம் பெற்ற இந்தியாவை (ஷிக்ஷித் அவுர் சமர்த் பாரத்) உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதற்கு தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்ற தனது நம்பிக்கையையும் தெரிவித்தார். 
இந்திய வயது வந்தோர் கல்வி கூட்டமைப்பு (IAEA) 1966 முதல் நேரு எழுத்தறிவு விருதையும் 1987 முதல் தாகூர் எழுத்தறிவு விருதையும் கல்வி மற்றும் தேசிய மேம்பாடு ஆகியவற்றுக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றும் தனி நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது.  பேராசிரியர் பி. ஆதிநாராயண ரெட்டி மற்றும் பேராசிரியர் எம்.சி. ரெட்டப்ப ரெட்டி ஆகியோருக்கு நேரு எழுத்தறிவு விருதுகள் முறையே 2019க்கும் 2020க்கும் வழங்கப்பட்டுள்ளன.  அதே போன்று பேராசிரியர் அனிதா டிக்கே மற்றும் திருமதி நிஷாத் ஃபரூக் ஆகிய இருவரும் தாகூர் எழுத்தறிவு விருதுகளை முறையே முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கு  பெற்றுள்ளனர்.



(Release ID: 1783349) Visitor Counter : 1459