சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
அடுத்த 2-3 ஆண்டுகளில் ரூ 7 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த சாலைப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது
Posted On:
17 DEC 2021 4:57PM by PIB Chennai
நெடுஞ்சாலைகள், பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காக்கள், வழித்தட வசதிகள், கிடங்கு மண்டலங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான முதலீட்டு வாய்ப்புகளை வழங்கும் உள்கட்டமைப்புத் துறையில் தைரியமாக முதலீடு செய்ய முன்வருமாறு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி அழைப்பு விடுத்தார்.
மும்பையில் இன்று நடைபெற்ற நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்து துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த தேசிய மாநாட்டில் உரையாற்றிய திரு கட்கரி, "சாலைத் துறையில் செய்யப்படும் முதலீட்டின் மீதான வருவாய் விகிதம் மிக அதிகமாக உள்ளது, எனவே பொருளாதார நம்பகத்தன்மை பற்றி கவலைப்படத் தேவையில்லை" என்றார்.
நிலம் கையகப்படுத்துவதில் உள்ள சிக்கல்களால் திட்டங்கள் முடங்கியிருந்தன எனக்கூறிய அவர், எனவே 90% நிலம் கையகப்படுத்துதல் நிறைவடைந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு முன்னதாக, திட்டத்திற்கான ஒப்பந்தம் வழங்கப்படக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம் என்றார். சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை விரைவுபடுத்த தமது அமைச்சகம் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கோள் காட்டிய அமைச்சர், “உங்கள் நம்பிக்கையை 110% ஆக வைத்திருங்கள்” என்றார்.
பாரத்மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவிருக்கும் திட்டங்களின் பல்வேறு நன்மைகள் குறித்தும் அமைச்சர் பேசினார். "மும்பையிலிருந்து தில்லிக்கு சாலை வழியாக பயண நேரம் 48 மணிநேரத்தில் இருந்து 12 மணிநேரமாக ஒரு வருடத்திற்குள் குறையும்; சாலைத் திட்டங்கள் மற்றும் பல்வகை உள்கட்டமைப்புத் திட்டங்கள், சரக்கு போக்குவரத்து செலவுகளைக் குறைத்து உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிப்பதோடு, பொருளாதாரம் வளர உதவும்" என்று அவர் கூறினார்.
பாரத்மாலா திட்டம் என்பது தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டிற்கான முதன்மையான திட்டமாகும். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தின் செயல்திறனை இது மேம்படுத்துவதோடு,தொடர்புடைய உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
ரூ 7 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை அடுத்த 2-3 ஆண்டுகளில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது என்று தேசிய மாநாட்டில் முதலீட்டாளர்கள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
அரசின் பழைய வாகன அழிப்புக் கொள்கையின் நன்மைகள் குறித்தும் அமைச்சர் பேசினார். "இது மாசுபாட்டைக் குறைக்கும், வரி வருவாயை மேம்படுத்தும், ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு உதவும், ஏற்றுமதியை அதிகரிக்கும் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்" என்று அவர் கூறினார். "அனைவரும் வெற்றி பெறும் சூழ்நிலை இதுவாகும், இதில் அதிக அளவில் முதலீடு வரகைகூடும் ," என்று அமைச்சர் நிதின் கட்கரி மேலும் கூறினார்.
பாரத்மாலா நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், சொத்துகளைப் பணமாக்குதல் மற்றும் பழைய வாகனங்களை அழிக்கும் கொள்கை ஆகியவற்றின் குறித்து மாநாடு கவனம் செலுத்தியது.
****************
(Release ID: 1782796)
Visitor Counter : 204