குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு எம் வெங்கய்யா நாயுடுவுடன் வியட்நாம் தூதுக் குழு சந்திப்பு
Posted On:
17 DEC 2021 4:28PM by PIB Chennai
வியட்நாம் சோஷலிச குடியரசின் தேசிய சட்டப்பேரவைத் தலைவர் திரு வாங் தின் ஹ்யூ மற்றும் வியட்நாம் நாடாளுமன்ற தூதுக்குழுவினரை, நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (17.12.2021) குடியரசு துணைத்தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு எம் வெங்கய்யா நாயுடு வரவேற்றார்.
தூதுக்குழுவினரை வரவேற்றுப் பேசிய திரு நாயுடு, திரு வாங் தின் ஹ்யூ தலைமையில், சமூக-பொருளாதார புத்துயிரூட்டல் உட்பட, வியட்நாமின் கொவிட்-19 பெருந்தொற்று பாதிப்பை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை திட்டமிடுவதில் வியட்நாம் தேசிய சட்டப்பேரவை முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறினார்.
சர்வதேச வேஷக் தினக் (புத்த பூர்ணிமா) கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக 2019-ஆம் ஆண்டு தாம் வியட்நாம் பயணம் மேற்கொண்டதை நினைவு கூர்ந்த திரு நாயுடு, தமது பயணத்தின் போது வியட்நாம் மக்களின் அன்றாட வாழ்வில், புத்தமதக் கொள்கைகள், அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவதை தாம் உணர்ந்ததாகவும், இந்தக் கொள்கைகள் மக்களின் வாழ்க்கை முறையை உண்மையிலேயே செழுமைப்படுத்தியிருப்பதுடன், இருநாட்டு கலாச்சாரம் மற்றும் சமுதாயங்களிடையே வலுவான பிணைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு ஒத்துழைப்பு பற்றிக் குறிப்பிட்ட திரு நாயுடு, ஆசியாவை உற்று நோக்குங்கள் என்ற இந்திய கொள்கையின் முக்கியத் தூணாகவம் இந்தோ – பசிபிக் தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய பங்குதாரராகவும் வியட்நாம் திகழ்வதாகக் கூறினார். ராணுவ ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள், வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் வரை பல்வேறு துறைகளில் இந்தியா – வியட்நாம் இடையேயான இருதரப்பு உறவுகள் சிறப்பாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ராணுவத் தொழில் ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு, திறன் உருவாக்கத் திட்டங்கள், மற்றும் ஐ நா அமைதி காக்கும் படை உள்ளிட்ட துறைகளில் இருதரப்ப ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியம் என திரு நாயுடு குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1782690
------
(Release ID: 1782746)
Visitor Counter : 205