பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 1971 போரில் இந்திய வெற்றியின் 50 ஆண்டுகளை நினைவு கூறும் பொன் விழாவை தொடங்கி வைத்தார்.

போரில் வெற்றியை உறுதி செய்த துணிச்சலான இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் தியாகத்திற்கு நாடு என்றும் கடன்பட்டிருக்கும் என்றார்

Posted On: 12 DEC 2021 2:06PM by PIB Chennai

பாதுகாப்பு துறை அமைச்சர் உரையின் முக்கிய அம்சங்கள்:

ஜெனரல் பிபின் ராவத்தின் அகால மரணத்தில், இந்தியா ஒரு துணிச்சலான வீரரை, திறமையான ஆலோசகரை இழந்துவிட்டது.

இந்தியா எந்த நாட்டின்  மீதும் படையெடுத்துச் சென்றதில்லை, அல்லது வேறொருவரின் நிலத்தின் ஒரு அங்குலத்தைக் கூட கைப்பற்றியதில்லை.

பயங்கரவாதம் மற்றும் பிற இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் விரும்புகிறது; நேரடிப் போரில் வென்றோம் மறைமுகப் போரிலும் வெற்றி நமதே.

யார் ஒருவர் நம்மைப் பிரிக்க முயன்றாலும், முன்பை விட ஒற்றுமையாக எதிரிகளை எதிர்கொள்வோம்.

ஆயுதப் படைகளை எந்த ஒரு நிகழ்வுக்கும் தயாராக வைத்திருப்பதே நமது நோக்கம்

பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், டிசம்பர் 12, 2021 அன்று புதுதில்லியில் உள்ள இந்தியா கேட்  புல்வெளியில் வங்காளதேசத்தின் விடுதலைக்காக 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் இந்திய வீரர்களின் பங்களிப்பை நினைவுகூறும் நிகழ்வான வெற்றி  பொன் விழாவை தொடங்கி வைத்தார். இந்த போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும் விழாவின் உச்சக்கட்டமாக இந்நிகழ்வு அமைந்தது. அப்போது டிசம்பர் 08, 2021 அன்று தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான நாட்டின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி திரு ராஜ்நாத் சிங் தனது உரையைத் தொடங்கினார். ஜெனரல் ராவத்தின் அகால மரணத்தில், இந்தியா துணிச்சலான வீரரை, திறமையான ஆலோசகரை இழந்து விட்டது  என்றும் அவர் வெற்றி பொன் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் என்றும் தெரிவித்தார்.

1971 போரில் வெற்றியை உறுதி செய்த துணிச்சலான இந்திய வீரர்கள், மாலுமிகள், விமானப் போர்வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அவர் அஞ்சலி செலுத்தியதுடன், அவர்களின் தியாகத்திற்கு நாடு எப்போதும் கடமைப்பட்டிருக்கும் என்று கூறினார். 1971 ஆம் ஆண்டின் போர் வெற்றியானது மனிதாபிமானமற்ற தன்மையின் மீது மனிதநேயமும், ஒழுக்கக்கேட்டின் மீது அறமும், அநீதியின் மீது நீதியும் பெற்ற வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டார்.

மேலும்,1971 போர் இந்தியாவின் ஒழுக்கம் மற்றும் ஜனநாயக மரபுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு நாடு போரில் மற்றொரு நாட்டை தோற்கடித்த பிறகு, தனது ஆதிக்கத்தை திணிக்காமல், அதன் அரசியல் பிரதிநிதியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதை வரலாற்றில் அரிதாகவே பார்க்க முடியும். இந்தியா இதை செய்தது, ஏனெனில் இது நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி என தெரிவித்தார்.

1971 தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் தொடர்ந்து மறைமுக போரை நடத்தி வருவதுடன், பயங்கரவாதம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான பிற நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவில் அமைதியை சீர்குலைக்க விரும்புகிறது.

திரு ராஜ்நாத் சிங் மேலும் கூறுகையில், இந்தியா தனது ஏவுகணைகளுக்கு ஆகாஷ், பிருத்வி, அக்னி என்று பெயர்கள் வைக்க, பாகிஸ்தானோ இந்தியாவை ஆக்கிரமித்தவர்களான கோரி, கஸ்னவி, அப்தாலி, ஆகியோரின் பெயர்களை தங்கள் ஏவுகணைகளுக்கு வைப்பதிலிருந்தே பாகிஸ்தானில் உள்ள இந்திய எதிர்ப்பு உணர்வைக் காணலாம் என்றார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1780639

 

            ****


(Release ID: 1780670) Visitor Counter : 249