பிரதமர் அலுவலகம்

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் பலவகை திட்டங்களைத் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 04 DEC 2021 6:21PM by PIB Chennai

உத்தராகண்டின் மதிப்புமிகு மூத்த குடிமக்கள், சகோதரிகள், சகோதரர்கள் அனைவருக்கும்  எனது வணக்கத்தை நான் தெரிவித்துகொள்கிறேன். நீங்கள் சிறப்பானவற்றை செய்திருப்பதாக நான் நம்புகிறேன். தயவு செய்து எனது வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள்.

  உத்தராகண்டின் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, மக்கள் செல்வாக்குள்ள, ஆற்றல்மிக்க முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாம் அவர்களே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களான பிரகலாத் ஜோஷி அவர்களே, அஜய் பட் அவர்களே, உத்தராகண்டின் அமைச்சர்களான சத்பால் மகராஜ் அவர்களே, ஹரக் சிங் ராவத் அவர்களே, மாநில அமைச்சரவையின் இதரஅமைச்சர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாக்களான நிஷாங்க் அவர்களே, தீரத் சிங் ராவத் அவர்களே, இதர நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களான திரிவேந்த்ர சிங் ராவத் அவர்களே, விஜய் பகுகுணா அவர்களே, சட்டமன்றத்தின் இதர உறுப்பினர்களே, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களே, மதன் கௌஷிக் அவர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே,

 மாபெரும் எண்ணிக்கையில் நீங்கள் அனைவரும் என்னை ஆசிர்வதிக்க வந்திருக்கிறீர்கள். உங்களின் அன்பையும், வாழ்த்துக்களையும் பெறுவதில் நாங்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறோம்.

உத்தராகண்ட் வெறும் நம்பிக்கையின் மையம் மட்டுமல்ல, கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டின் சின்னமாகும். அதனால் தான், மாநிலத்தின் வளர்ச்சி என்பது மத்திய மற்றும் மாநிலத்தின் ‘இரட்டை இயந்திர அரசாங்கத்தின்’ முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.  இந்த உணர்வுடன் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் உத்தராகண்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.  மாநில அரசு இந்த திட்டங்களை வெகுவேகமாக அமல்படுத்தி வருகிறது. இதனை முன்னெடுத்து செல்லும் வகையில் ரூ.18,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன அல்லது அடிக்கல் நாட்டப்படுகின்றன.

சகோதர, சகோதரிகளே,

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், வாஜ்பாய் அவர்கள் இந்தியாவில் இணைப்பு வசதிகளை அதிகரிக்க ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். ஆனால், அதன் பிறகு 10 ஆண்டுகளாக நாட்டின் மற்றும் உத்தராகண்டின் மதிப்புமிக்க நேரத்தை வீணடிக்கும் வகையில் ஓர் அரசு இருந்தது. 10 ஆண்டுகளாக நாட்டில் உள்கட்டமைப்பு என்ற பெயரில் ஊழல்கள், மோசடிகள் நடந்தன. நாட்டிற்கு ஏற்பட்ட இந்த  இழப்பை ஈடுகட்ட இரண்டு மடங்கு உழைத்ததோடு இன்றும் அவ்வாறே செய்து வருகிறோம். நவீன அடிப்படை உள்கட்டமைப்பில் 100 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யும் நோக்கத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது.

சகோதர, சகோதரிகளே,

 இந்த தேவபூமிக்கு பக்தர்களும், தொழில்முனைவோரும், இயற்கையை நேசிக்கும் சுற்றுலா பயணிகளும் வருகிறார்கள். இந்த பூமியின் வளத்தை அதிகரிக்க நவீன உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னெப்போதும் இல்லாத வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தேவ்பிரயாக் முதல்  ஸ்ரீகோட்வரை, பிரம்பூரியிலிருந்து கௌடில்யா வரையிலான திட்டங்கள் இன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளன. லம்பாகட் நிலச்சரிவினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இப்போது முன்பைவிடப் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.

சகோதர, சகோதரிகளே,

 தில்லி-டேராடூன் விரைவுச்சாலை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் வளர்ச்சிக்கான மாதிரியின் சான்றாக இருக்கும். தொழில்துறைக்கான வழித்தடத்தோடு வனவிலங்குகளை பாதுகாக்கும்வகையில் ஆசியாவின் மிகப்பெரிய உயர்மட்ட வழித்தடமும் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் போக்குவரத்தை எளிதாக்குவது மட்டுமின்றி வனவிலங்குகள் பாதுகாப்பாக நடமாடவும் உதவும்.

நண்பர்களே,

இத்தகைய மாற்றத்தை நாம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கொண்டு வருகிறோம். இந்த மாற்றங்களுடன் 21-ம் நூற்றாண்டை நோக்கி முன்னேறி செல்லும் உத்தராகண்டின் மக்கள் சுதந்திரமானவர்களாக இருப்பார்கள்.

நண்பர்களே,

சுமுதாயத்தில் உதவி தேவைப்படுபவர்களுக்கு சிலவற்றை செய்வது என்பதற்கும் வாக்குவங்கியை உருவாக்க சிலவற்றை செய்வது என்பதற்கும் இடையேயான மிகப்பெரும் வித்தியாசம் உள்ளது. ஏழைகளுக்கு நமது அரசு விலையில்லாமல் வீடுகளை வழங்கும்போது அவர்கள் தங்களது வாழ்க்கையின் மிகப்பெரும் கவலையிலிருந்து விடுபடுகிறார்கள். ஏழைகளுக்கு ரூ.5 லட்சம் வரை நமது அரசு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கும்போது அவர்களின் நிலம் விற்கப்படுவதிலிருந்து அது பாதுகாக்கிறது. கடன் என்ற விஷச்சக்கரத்தில் சிக்காமல் அவர்களைப் பாதுகாக்கிறது. கொரோனா காலத்தில் ஏழைகளுக்கு விலையின்றி உணவுதானியங்களை  நமது அரசு உறுதி செய்த போது பசியிலிருந்து அது அவர்களைப் பாதுகாத்தது. நாட்டின் ஏழைகளை, நடுத்தர மக்களை நான் அறிவேன். எனவே நமது திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள மக்களிடமிருந்து வாழ்த்துக்களை பெறுகிறது.  

எனதருமை சகோதர, சகோதரிகளே,

உத்தராகண்டை அதிவேகமாக வளரும் மாநிலமாக மாற்றுவதற்கு உங்களின் வாழ்த்துக்களோடு இந்த இரட்டை என்ஜின் வளர்ச்சி தொடரும். இந்த நம்பிக்கையோடு உங்கள் அனைவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை வாழ்த்து தெரிவிக்கிறேன்.

                                                                    ***************



(Release ID: 1778515) Visitor Counter : 178