பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக புதிய தொழில்நுட்பங்களை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உருவாக்க வேண்டும்: அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

Posted On: 04 DEC 2021 1:33PM by PIB Chennai

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்து புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு பங்களிக்க சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார். 

இந்திய பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியாளர்களின் சங்கத்துடன் இணைந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தித் துறை டிசம்பர் 04, 2021 அன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்திருந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநாட்டில் தொடக்க உரை ஆற்றிய அவர், உலோக உபகரணங்களை தயாரிப்பில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஜெர்மனியின் மிட்டெல்ஸ்டாண்ட் போன்ற தொழில்துறை தளத்தை இந்தியாவில் உருவாக்க சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை  வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உலகப் புகழ்பெற்ற தொழில்துறை தளத்தை இந்தியாவில் உருவாக்க முடியும் என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சிறிய அளவில் தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதன் மூலம் பெரிய நிறுவனங்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆதரிக்கின்றன என்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன என்றும் கூறினார். 

இளைஞர்களை மேம்படுத்துவதிலும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதிலும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரும் பங்கு வகிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். இந்தியா விரைவில் இந்திய ஆயுதப் படைகளுக்கு மட்டுமன்றி , உலகிற்கும் அதிநவீன தொழில்நுட்ப வழங்குநராக மாறும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். 

தொடர்ந்து மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இத்துறையில் தற்சார்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கிறது என்று திரு சிங் கூறினார். இந்தத் துறையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தாங்களது   முழு திறனையும் கட்டவிழ்த்துவிட வேண்டிய அவசியம் உள்ளது என்றார். 

நாட்டின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் இந்திய உற்பத்தியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1778002


(Release ID: 1778011) Visitor Counter : 243