சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நெடுஞ்சாலைகளில் மரம் வளர்க்க நடவடிக்கை

Posted On: 01 DEC 2021 2:44PM by PIB Chennai

நெடுஞ்சாலைகளை அகலப்படுத்தும் போது வெட்டப்படும் மரங்களை ஈடுகட்ட, சாலைகளில் மரம் வளர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை  தெரிவித்துள்ள அவர், ஒப்பந்ததாரர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் மரங்கள் வளர்க்கப்படுவதாகத் தெரிவித்தார். 2021 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 94 திட்டங்களில்  55.10 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:

வாகன அழிப்பு கொள்கை

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு, மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களைப் படிப்படியாக அழிப்பதற்கான கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களின் தகுதியை இந்தக் கொள்கை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த 1988 மோட்டார் வாகன சட்டம், மத்திய மோட்டார் விதிமுறைகள் 1989 ஆகியவற்றின் கீழ் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மலைப்பகுதி மாநிலங்களில் நெடுஞ்சாலை அமைப்பு

ஜம்மு காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், உத்தராகண்ட், அசாம், மேகாலயா, அருணாச்சலப்பிரதேசம், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மலைப்பாங்கான பகுதிகளைக் கொண்ட மாநிலங்களில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 4,358 கி.மீ. தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.70,733 கோடி செலவாகியுள்ளது.

ஃபாஸ்டாக் மூலம் கட்டண வசூல் அதிகரிப்பு

2021- ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ள ஃபாஸ்டாக் மூலம் கட்டணம் வசூலிக்கும் முறையால் வருவாய் அதிகரித்துள்ளது. 2020- ஆம் ஆண்டு ஃபிப்ரவரி  மாதம் சராசரியாக  நாளொன்றுக்கு ரூ.80 கோடி வசூலான நிலையில் இந்த ஆண்டு ஃபிப்ரவரி மாதம் தினசரி வசூல் ரூ.104 கோடியாக இருந்தது.

சாலை விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை

சாலை விபத்துக்களை கணிசமாகக் குறைக்க பல்முனை உத்திகளை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் எடுத்து வருகிறது. சாலைகளை அமைக்கும் போதே விபத்து ஏற்படாத வண்ணம் அமைப்பது, விபத்துக்கு இலக்காகும் பகுதிகளில் எச்சரிக்கை செய்து உரிய நடைபாதை வசதிகள், வாகனங்களில் விபத்து தடுப்பு வசதிகளை கண்காணித்தல், அண்மையில் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கில செய்திக்குறிப்புகளை காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1776787

 

                                                   ******

(Release ID: 1776787)


(Release ID: 1776899) Visitor Counter : 190


Read this release in: English , Urdu , Bengali , Punjabi